Friday 21 April 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 62வது ரயில்வே வார விழா






தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இன்று (21.04.2017) 62வது ரயில்வே வார விழா சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. 1853ம் ஆண்டில் இந்தியாவில் ரயில் சேவை முதன் முறையாக துவங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இவ்விழா நாடெங்கிலும் இந்திய ரயில்வேயால் கொண்டாடப்படுகிறது.

விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா அவர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்ட ரயில்நிலையங்கள் மற்றும் பாதுகாப்பான ரயில் தடப்பகுதி போன்றவற்றிற்காக 14 சுழற்கேடயங்களை சம்பந்தப்பட்ட ரயில்நிலைய மேலாளர்களுக்கு வழங்கினார். சிறப்பாக பராமரிக்கப்பட்ட பெரிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை கோயம்புத்தூர் ரயில் நிலைய மேலாளர் திரு. சின்னராஜ் அவர்களும், சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை விருத்தாசலம் அடுத்துள்ள புக்கிரவாரி ரயில் நிலைய மேலாளர் திரு. ராஜசேகர் அவர்களும். திரு ஹரிசங்கர் வர்மா அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.  இது தவிர 20 அதிகாரிகள் உள்பட 402 சேலம் கோட்ட ஊழியர்களுக்கு திரு. ஹரிசங்கர் வர்மா அவர்கள் கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி அனிதா வர்மா அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

ரயில்களில் பாதுகாப்பு தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எங்கிருந்தாலும் தொடர்பு கொண்டு உதவி செய்ய வசதியாக அதிநவீன மொபைல் போன் ஒன்றை சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி அனிதா வர்மா அவர்கள் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு வழங்கினார், அதை ரயில்வே பாதுகாப்புப் படை கோட்ட ஆணையர் திரு பி, ராஜ்மோகன் அவர்களும் சேலம் தலைமைக் காவலர் திருமதி சுதா அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

விழாவின் போது சேலம் கோட்டத்திற்கு அதிக அளவில் சரக்குகள் புக்கிங் செய்து வரும் நிறுவனங்களான இந்தியா சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ். ஜிண்டால் ஸ்டீல், சேலம் ஸ்டீல் மற்றும் சீனிவாசா ரோட்வேஸ் பிரதிநிதிகளை திரு வர்மா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்

விழாவில் பேசுகையில் திரு. ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் கடந்த நிதியாண்டில், சிறப்பாக பணியாற்றி மேம்பாடு கண்டிருப்பதாக தெரிவித்தார்.  மொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 4.9 சதவீதம் அதிகரித்து 635.7 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், பயணிகள் வருவாய் ரூ.477.18 கோடியில் இருந்து ரூ.511.23 கோடியாக 7.14 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பயணச்சீட்டு சோதனை வருவாய் ரூ.4.97 கோடியில் இருந்து ரூ.6,18 கோடியாக 24.55 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், உணவக வருவாய் ரூ.2.79 கோடியில் இருந்து ரூ.3.14 கோடியாக 12.72 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

கோயம்புத்தூர், ஊட்டி, மற்றும் குன்னூர் ரயில்நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சேலம் ரயில்நிலையத்தில் வைபை வசதி செய்யப்படும் என்றும் தெரிவித்த அவர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ரயில்நிலையங்களில் குளிர்வசதி செய்யப்பட்ட காத்திருப்பு அறைகள், சேலத்தில் எஸ்கலேட்டர் வசதி, கோயம்புத்தூரில் மகளிர் உதவி மையம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் போன்ற ரயில்நிலையங்களில் குழந்தைகளுக்கான உணவு விற்பனைக்கான ஜனனிசேவா கடைகள், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வசதியாக கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், ரயில்நிலையங்களில் தனி அறைகள், பணப்பரிவர்த்தனையை குறைக்க பெரும்பாலான ரயில்நிலையங்களில் கிரடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சொன்னார்

தெற்கு ரயில்வே கோட்டங்களில் சேலம் கோட்டம் சமூக வலைதளங்களில் பயணிகள் குறைதீர்ப்பில் விரைந்து செயல்பட்டு அதாவது 12 நிமிடங்களில் குறைதீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து ரயில்வே வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவை மாயவரம் ஜனசதாப்தி விரைவு ரயிலில் சூரிய மின்சக்தி பலகைகள் நிறுவப்பட்டு தற்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் 

ஊழியர்களின் குறைதீர்க்க அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பிரதிநிதிகளுடன் 36 மணி நேரம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட 583 குறைகள் ஒரேநாளில் தீர்க்கப்பட்டதாகவும், ரயில்வே குடியிருப்பில் ஊழியர்களுக்காக புதிய குடியிருப்புகள், மற்றும் திறந்த வெளி விளையாட்டரங்கம் சேலத்தில் கட்டப்பட இருப்பதாகவும் சொன்னார்

தெற்கு ரயில்வே தலைமையக ரயில்வே வார விழாவில் சேலம் கோட்ட பொறியியல், வணிகவியல் மற்றும் பொருள்வாங்கும் பிரிவுகள் சிறப்பாக பணியாற்றியமைக்கான சுழற்கேடயம் பெற சிறப்பாக பணியாற்றிய சேலம் கோட்ட    அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர் பாராட்டினார்.


விழாவில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.  வந்திருந்தோரை மகிழ்விக்க ஊழியர்களின் கலை நிகழ்ச்சிசகள் நடைபெற்றன. முன்னதாக சேலம் கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் திரு. சந்திரபால் அவர்கள் வந்திருந்தோரை வரவேற்றார். சேலம் கோட்ட  பணியாளர் நல அலுவலர் திரு. எஸ்.திருமுருகன் நன்றியுரை வழங்கினார்.  

No comments:

Post a Comment