Wednesday, 1 March 2017

சேலம் கோட்ட ரயில்களில் உயிரிக்கழிவறைகள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

சேலம் கோட்ட ரயில்களில் உயிரிக்கழிவறைகள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

பசுமை ரயில் தடங்களை நாடெங்கிலும் உருவாக்கும் ரயில்வே அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்புக்கூடத்தில் தற்போது முதன்மைப் பராமரிப்பில் உள்ள சேரன்/நவஜீவன் விரைவு ரயில், கோயம்புத்தூர் சென்னை நகரிடை இன்டர்சிட்டி ரயில், கோயம்புத்தூர் மன்னார்குடி செம்மொழி விரைவு ரயில், கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயில், கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு ரயில் போன்ற பல ரயில்களில் தற்போதுள்ள கழிவறைகளை மாற்றி உயிரிக் கழிவறைகளாக அதாவது பயோடாய்லட்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தம் 35 ரயில்பெட்டிகளில் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக, புனேயில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து 2 கட்டங்களாக அதாவது 30/12/2016 அன்றும் 12.02.2017 அன்றும், (35 ரயில்பெட்டிகளுக்கு பெட்டிக்கு 4 பயோ கழிவறைகள் வீதம்) 140 பயோ கழிவறைகள் ரயில்வே வாரியத்தில் இருந்து சேலம் கோட்ட கோவை ரயில்பெட்டி பணிமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளன.

ஒரு ரயில்பெட்டியில் தற்போதுள்ள 4 கழிவறைகளையும் மாற்றி அவற்றில் பயோடாய்லட் பொருத்துவதற்கு குறைந்த பட்சம் 2 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதால், இயக்கத்தில் உள்ள ரயில்பெட்டிகளை நிறுத்தி அவற்றில் இப்பணிகளை மேற்கொள்ள இயலாது. எனவே, உதிரியாக அதாவது spare என்று சொல்லப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே ஒன்றன் பின் ஒன்றாக இவற்றை பொருத்த முடியும். இதுவரை 15 ரயில்பெட்டிகளில் இவை பொருத்தப்பட்டுள்ளன. மார்ச் 25க்குள் இவை அனைத்தும் மீதமுள்ள ரயில்பெட்டிகளிலும் பொருத்தி முடிக்கப்பட்டு விடும்.

ஒரு ரயில்பெட்டியில் 4 உயிரிக்கழிவறைகள் பொருத்த அனைத்து செலவுகளும் உட்பட சுமார் 4,13,000 ரூபாய்கள் செலவாகும்.

No comments:

Post a Comment