Tuesday, 21 June 2016

சேலம் கோட்டத்தில் 16வது ரயில்வே உபயோகிப்பாளர் கலந்தாலோசனைக் கூட்டம்

 திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் குத்து விளக்கேற்றுகிறார்.
 ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது
  திரு ஆர்.எஸ்,சின்ஹா உரையாற்றுகிறார்
திரு ஹரி சங்கர் வர்மா உரையாற்றுகிறார்
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்

 






















சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் நடைபெற்ற 16வது ரயில்வே  உபயோகிப்பாளர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், ஓசூர், மற்றும் கரூரில் இருந்து வந்த உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். அவர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளும் அதற்கான பதில்களும் கீழே

மேட்டுப்பாளையம்
திரு ராஜேந்திரன் அவர்கள் துடியலூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் ரயில்நிலையங்களை மேம்படுத்தி அவற்றில் அனைத்து  வசதிகளையும செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டபோது, கோட்ட  மேலாளர் தற்போது அந்த ரயில்நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும், புதிய கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும்  தெரிவித்தார்.  மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து  வந்திருந்த உறுப்பினர்களிடம், தமிழக அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி மேட்டுப்பாளையம் ரயில்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைமேடை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொண்டார். 

கோயம்புத்தூர்
திரு சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் கோயம்புத்தூர் பங்களூரு இடையே விரைவு ரயில் இயக்க நீண்ட நாள் கோரிக்கை இருப்பது பற்றி குறிப்பிட்ட போது, கோட்ட மேலாளர் முன்னமே இது பற்றி வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பதிலளித்தார்.  பீளமேடு ரயில் நிலையத்தினை மாதிரி ரயில்  நிலையமாக மேம்படுத்துவது பற்றிய கேள்விக்கு, இது குறித்து ஏற்கனவே திட்ட வரைவு உள்ளதாகவும், அங்குள்ள நிறுவனங்களிடம் நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் அதற்கான நிதி பெறுவதற்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.  வடக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை சேரன் விரைவு ரயில்  போன்ற ரயில்கள் வந்து செல்லும் நிறுத்தமாக மாற்றுவது குறித்து கேட்ட போது, திரு. வர்மா அங்குள்ள சரக்கு முனையத்தை இருகூருக்கு மாற்றினால்தான் இது சாத்தியம்  என்றும்  அவ்வாறு மாற்றுவதற்கு அங்கு கடும் எதிர்ப்பு நிலவுவதால், அவர்களுடன் உள்ளூர் வாசிகள் மூலமாக பேசி சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் மாற்றுத்திற்னாளிகளுக்கான வசதிகள் போதாமல் இருப்பது பற்றிய கேள்விக்கு திரு.வர்மா, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் உள்ள வசதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும்  விரைவிலேயே கோயம்புத்தூர் ரயில்நிலையம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ரயில்நிலையமாக விளங்கும்  என்றும் சொன்னார்.  பேட்டரி மூலம் இயங்கும் கார்களுக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தால் உடனடியாக அனுமதி தரப்படும் என்றும் அவர் சொன்னார். 

திருப்பூர்
திரு ஜே வி சுரேஷ் குமார் அவர்கள் பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் இயக்க கோரிக்கை  வைத்த போது, அத்தகு கார்களை வழங்க நிறுவனங்கள் முன் வந்த  போதிலும், அந்த கார்களுக்கான இயக்குநர்களின் மாதாந்திர ஊதியம் வழங்க தயங்குவதாகவும், மற்ற ரயில் நிலையங்களில் உள்ளதுபோன்று ரோட்டரி போன்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் ஊதியம் வழங்க முன்வந்தால் இப்பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் என்றும்சொன்னார்.  குளிர்வசதி செய்யப்பட்ட பல படுக்கையறை விரைவில் திருப்பூரில் நிறுவப்படும் என்றும் தற்போது செய்யப்பட்டு வருவதுபோன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தெரிவித்தார். 

திரு சபாபதி  அவர்கள் கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட  போது, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்ட மேலாளர் உறுதியளித்தார். மேலும் சரக்குகளை ஏற்ற வசதியாக விரைவு ரயில்களை 5 நிமிடம்  வரை திருப்பூரில் நின்று செல்ல ஏற்பாடு  செய்யுமாறு கேட்ட போது, தற்போது 8 ரயில்களுக்கு அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுமேலும் பல ரயில்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றும் சொன்னார். 

ஈரோடு
திரு என்.சிவநேசன் அவர்கள் பேட்டரி மூலம் இயங்கும் கார்களை இயக்க கோரிக்கை வைத்த போது, முன்னர் குறிப்பிட்டது போல கார்கள் மற்றும் இயக்குநர்களின் ஊதியத்தை ஏற்க நிறுவனங்கள் முன் வந்தால் இது உடனடியாக சாத்தியம் என்று சொன்னார்.  முன்பதிவற்ற ரயில்  பெட்டிகளில் மொபைல் சார்ஜ்  செய்ய வசதி செய்து தருமாறு கேட்ட போது, சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களில் இருந்து புறப்படும்  அனைத்து ரயிலகளிலும் இந்த வசதி உடனடியாக செய்யப்படும் என்று பதிலளித்தார்.  பெருந்துறை ஈங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து  சிப்காட்  வரை புதிய ரயில்பாதை அமைப்பது  பற்றி கேட்டபோது இது பற்றி சிப்காட் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், பதிலுக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்.  மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள் முன்பதிவு பெட்டியில்லாத விரைவு ரயிலகளில் முன்பதிவு ரயில்பெட்டிகளில் ஏறினால், பயணச்சீட்டு பரிசோதகர்கள் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து  கொள்வது பற்றிய புகாருக்கு, திரு. வர்மா பயணிகளிடம் பணிவாக நடந்து கொள்ள ஏற்கனவே அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதை  மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஆனால், முன்பதிவு பெட்டிகளில் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள் ஏறி அங்குள்ள பயணிகளுக்கு தொல்லை தராமல் இருப்பது நல்லது என்றும் சொன்னார். 

திரு  கௌதமன் அவர்கள் கோயம்புத்தூர் சென்னை இன்டர்சிடி, கோவை விரைவுரயில் போன்ற ரயில்களில் இருக்கைகள் பழுதாகியுள்ளதாகவும், ஏற்காடு விரைவு ரயிலில் கழிப்பறைகளில் உள்ள குழாய்கள் மற்றும் பிட்டிங்குகள் உடைந்து போயிருப்பதாகவும் குறிப்பிட்டபோது அவை மாற்றப்படும் என்று  கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.  சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயிலை ஈரோடு வரை நீட்டிக்கும் கோரிக்கை வைத்தபோது, தற்போது ஒரு ரயில் தொடர் மட்டுமே இருப்பதால், போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் தற்போது  அவ்வாறு செய்ய இயலாது என்று சொன்னார். 

சேலம்
திருஎம். துரைராஜ் அவர்கள் சேலம் சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்க கோரிக்கை வைத்தபோது, ஏற்கனவே  இது குறித்து வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது பரிசீலனையில் உள்ளதாகவும் சொன்னார்.  தமிழக அரசின் அம்மா குடிநீர் விலை குறைவாக உள்ளதால், ரயில் நிலையங்களில் அவற்றை விற்பனை செய்ய அனுமதி தர வேண்டும் என்று அவர் கேட்ட போது, அது போன்ற கொள்கை முடிவுகளை ரயில்வே  வாரியம் மட்டுமே எடுக்க இயலும் என்று பதிலளித்தார். 

திரு ஜெயசீலன் அவர்கள் சேலம் எழும்பூர் விரைவு ரயிலை சேலம் மார்க்கெட்ரயில் நிலையத்தில் நின்று செல்ல  வேண்டுகோள் விடுத்த  போது  அது பரிசீலிக்கப்படும் என்று சொன்னார்.  ரயில்பெட்டிகள்  அவற்றிற்கான குறிப்பிட்ட இடங்களில் நிற்காமல் தள்ளி நிற்பதால் முதியவர்கள் அவதிப்படுவதாக சொன்னபோது அது சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார். 

திரு அத்தியண்ணா அவர்கள், இரவு நேரங்களில் சேலம் ரயில்நிலையத்தில் வீல்சேர்கள் கிடைப்பது கடினமாக இருப்பது பற்றி குறிப்பிட்ட போது, அனைத்து நேரங்களில் வீல்சேர்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று திரு வர்மா உறுதியளித்தார்.  மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை தபால் மூலம்  பெற ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்ட போது, அவை தவறான நபர்களில் கைகளில் கிடைக்க வாய்ப்புள்ளதால், சேலம் கோட்ட அலுவலகத்தின்  வெளியே, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி  மையங்களில் குறிப்பிட்ட  நாட்களில் அடையாள அட்டைகளை பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்  என்று சொன்னதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில பெட்டிகளில் கழிவறைகள் சுத்தமாக பராமரிப்பது உறுதி செய்யப்படும்  என்றும்சொன்னார். 

ஓமலூரில் அதிக  ரயில்கள் நின்று செல்லவும், ரயில்  பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, பயணிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்படும்  என்று கோட்ட மேலாளர் உறுதியளித்தார். 

நாமக்கல்
திருமதி தமிழரசி யோகம் அவர்கள் நாமக்கல் ரயில் நிலையத்தை அணுகும் பாதை மோசமாக இருப்பதாக குறிப்பிட்ட போது  அது சரிசெய்யப்படும் என  உறுதியளித்த திரு வர்மா, பழனி சென்னை ரயிலில் இரவுநேரங்களில் ரயில்பெட்டிகள் உள்ளிருந்து பூட்டப்படுவதால் பயணிகள் ரயிலில் ஏற முடியவில்லை என்று சொன்ன போது, பயணச்சீட்டு பரிசோதகர்கள் அதனை கண்காணிக்க ஆணை பிறப்பிக்கப்படும் என்று உறுதியளித்தார். 

கரூர்
திரு  வி.என். மோகன் அவர்கள் கரூர் ரயில்நிலையத்தில் நடைமேம்பாலத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏறிச் செல்ல கடினமாக இருப்பது பற்றி குறிப்பிட்ட்ட  போது, விரைவிலேயே கரூர் ரயில்நிலையத்தில் மின்தூக்கி (lift) அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.  பழனி சென்னை விரைவு ரயில் கரூரில் அதிகாலை  வருவதால், பெண்பயணிகளுக்கு கடினமாக இருப்பது பற்றி குறிப்பிட்டபோது, சென்னை சென்ட்ரலில் வந்து சேரும் ரயில்களின் நேரத்தின் அடிப்படையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பதால் சென்னை கோட்டம் தான் இது பற்றி நடவடிக்கை எடுக்க முடியும்  என்று சொன்னார். 

கரூர் ரயில்நிலையத்தில் 3 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் ஒரே இடத்தில் இருப்பது பற்றி குறிப்பிட்ட போது, அவற்றுள் ஒன்று மறுபக்கம் மாற்றப்படும் என்று திரு வர்மா சொன்னார்.  சூரிய ஒளி  காரணமாக அங்குள்ள மின்னணு தகவல் பலகைகளை படிப்பது கடினமாக இருப்பது குறித்து சொன்ன போது  அவற்றை எதிர்புறம் மாற்ற ஆணை பிறப்பித்தார். 

பின்னர் உறுப்பினர்களிடையே பேசுகையில், பயனுள்ள பல கருத்துக்களை முன்வைத்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  சேரன் மற்றும் கொங்கு விரைவு ரயில்களில் கழிவறைகள் மற்றும்  படுக்கை விரிப்புகள் பற்றி பல  புகார்கள் வந்த்தால் அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.    ரயில்நிலையங்களில் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்க்க் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை10ம் தேதிக்கு பிறகு அவ்வாறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிம்ம் ரத்து செய்யப்பட்டு அவர்களது கடைகள் மூடப்படும் என்று சொன்னார்.   அத்தகு நடவடிக்கைகள் காணப்பட்டால், உடனடியாக சேலம் கோட்ட வணிகத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு அதை கொண்டு வருமாறு அவர்  உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.  

மேலும், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும், ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  நிதி உதவி பெற்றுத் தருமாறு கேட்டுக்  கொண்டார்.  மேலும் அவர்களுக்கு தெரிந்த தனியார் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிறுவன சமூக மேம்பாட்டுப் பொறுப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற ரயில்வேக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.  அத்தகு பணிகளின் பட்டியலையும் அவர்களுக்கு வழங்கினார். 


முன்னதாக, சேலம்கோட்ட  ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜுவின், வரவேற்புரை வழங்கினார்.  சேலம்  கோட்ட கூடுதல் மேலாளர் திரு ஆர்.எஸ்.சின்ஹா அவர்கள் சேலம் கோட்டத்தில் நடைபெற்றுவரும் மேம்பாடுகள் குறித்து  விளக்கினார். கூட்ட நிறைவில் சேலம் கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் திரு ஈ. ஹரிகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.  

No comments:

Post a Comment