Monday, 15 August 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 70வது சுதந்திர தின விழா








தெற்கு ரயில்வே சேலம்கோட்ட அலுவலகத்தில் இன்று (15/08/2016) 70வது சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் மூவர்ணக்கொடியேற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

விழாவில் பேசுகையில் திரு வர்மா சுதந்திரம் பெற தியாகம் செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.  அவர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு வசிஷ்ட ஜோஹிரி அவர்களது சுதந்திர தின செய்தியை வாசித்தார். 

ரயில்வே பாதுகாப்பு படை கமாண்டோக்கள் நடத்திய துப்பாக்கி சாகசம், ரயில்வே பாதுகாப்புப் படையின் நாய்ப்படை சாகசம், ரயில்வே பள்ளிகளின் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.  விழாவில், சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால், கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் திரு ராஜ்மோஹன், மற்றும் இதர கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் உரையாடுகையில், திரு வர்மா, சேலம்கோட்டம் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவற்றை ரயில்பாதைகளின் அருகில் போக்குவரத்து மற்றும் அங்குள்ள பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு இடையூறு நேராத வகையில் நட உள்ளதாகவும் தெரிவித்தார்.  தற்போது சேலம் கோட்டத்தில் 36 ரயில்பாலங்கள் உள்ளதாகவும், அவற்றுள் காவேரி நதிப்பாலம் உள்பட்ட 4 பாலங்கள் தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொன்னார்.  சேலம் ரயில் நிலையம், கோட்டத் தலைமையக ரயில்நிலையங்களில் தூய்மை பராமரிப்பில் முதலிடம் பெற்றுள்ளதாக சொன்னதுடன், அதற்காக, சேலம் வாசிகளுக்கு நன்றி தெரிவித்தார். 

தமிழகத்திறகு வரும் சுற்றுலா பயணிகளில் 80 சதவீதம் பேர் ஊட்டிக்கு வருவதால், ஊட்டியில் உள்ள  நீலகிரி மலை ரயில் நிலையத்தை அழகு படுத்தவும், அங்குள்ள தோட்டத்தை விரிவு படுத்தி, நீராவி எஞ்சின் மற்றும் ரயில்பெட்டிகளை அங்கு நிறுவ உள்ளதாகவும் சொன்னார்.  மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் ஊட்டியில் உள்ள ரயில்நிலையங்களை அவற்றின் தொன்மை பாதிக்கப்படாமல், புதுப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.   யானைகள் கடந்து செல்லும் இடங்களில் ரயில்களின் வேகம் மிகக்குறைவாகவே உள்ளதால், பாதுகாப்புக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.  ஆனாலும், பாதுகாப்பு கருதி மலைச்சரிவு உள்ள இடங்களில் கற்களின் மேல் வலைகள் பொறுத்தப்படும் என்றும் சொன்னார். 

கோயம்புத்தூரில் 2 குளிர்வசதி காத்திருப்பு அறைகள் பணிநிமித்தமாக பயணம் செய்வோரின் வசதிக்காக அமர்ந்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் திறக்கப்பட உள்ளன.  அங்கு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் தனியறைகளும், குழந்தை உணவுகள் விற்கும் ஜனனி சேவை மையங்களில் குழந்தைகளுக்கு உணவு தயார் செய்யும் வகையில் சுடுநீர் அமைப்புகள் பொருத்தப்படும் என்றும் சொன்னார்.  சேலம் ரயில்நிலையத்தில் 54 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்படும் என்றும், அதற்கு நிதிஉதவி செய்ய தனியார் முன்வந்தால் வரவேற்கப்படும் என்றும் அவர் சொன்னார்.  சேலம் கோட்டத்தில் உள்ள 78 ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகளில் 58 இந்த ஆண்டிலும், மீதம் உள்ளவை அடுத்த ஆண்டிலும் மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.


ரயில்களில் பணம் ஏற்றிச் செல்லும் பார்சல் வேன்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு, அவர் பாரத ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு ஆலோசகருடன் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாரத ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து சிறப்பு ரயில் பெட்டிகள் வடிவமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சொன்னார்.  சேலம் விருத்தாசலம் ரயில் தடம் மின்மயமாக்கல் பற்றி கேட்கப்பட்ட போது, அதிக அளவில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் தடங்கள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டு வருவதாகவும், இத்தடத்தில் போதுமான அளவு பயணிகள் போக்குவரத்து அதிகரித்தால், அது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் சொன்னார்.  

No comments:

Post a Comment