Monday, 8 May 2017

ரயில்பயணிகள் தண்ணீர் பற்றாக்குறையால் ரயில்களை நிறுத்தும் சம்பவம் குறித்து விளக்கம்

பிகு: மேற்கண்ட புகைப்படம் சேலம் கோட்டத்தின் எந்த ஒரு ரயில்நிலையத்திலும் எடுக்கப்பட்டதல்ல. ரயில் நிறுத்தப் போராட்டத்தை காட்டுவதற்கான மாதிரிப் புகைப்படம் மட்டுமே. 

கடந்த சில நாட்களாக சில ரயில் நிலையங்களில் முக்கியமாக ஈரோடு ரயில்நிலையத்தில் ரயில் பயணிகள் ரயில்பெட்டிகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், அவர்களுக்கு இது குறித்து விளக்கமளிக்க சென்ற ரயில்வே அதிகாரிகளுடன் சண்டையில் ஈடுபட்டு ரயில்நிலைய சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன

தற்போது நாடெங்கிலும், குறிப்பாக தமிழகமெங்கிலும் கடும் தண்ணீர் தட்டப்பாடு நிலவுவதால், ரயில்நிலையங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஆறு, ஏரி, போன்ற அனைத்து நீர் ஆதாரங்களும் வறண்டு காணப்படுகின்றன. இத்தகு ஒரு கடுமையான தண்ணீர்த் தேவை நிலவும் சூழலிலும், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களின் அறிவுறுத்தலின் படி சேலம் கோட்ட அதிகாரிகள், ரயில்களில் நீர் நிரப்பும் பணிகளை பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மேற்கொண்டு வருகிறார்கள்.

சேலம் கோட்டத்தில் குறிப்பிட்ட ரயில்கள் புறப்படும் அனைத்து ரயில்நிலையங்களிலும், அவை புறப்படும் முன்னர் அந்தந்த ரயில்நிலையங்களில் முழுமையாக நீர் நிரப்பப்பட்ட பின்னரே அவை அனுப்பப்படுகின்றன. ஆனால், ஈரோடு ரயில்நிலையத்தில் நாளொன்றிற்கு வந்து செல்லும் சுமாராக 133 நெடுந்தொலைவு ரயில்களில் கேம்டெக் என்றழைக்கப்படும் அதி நவீன இயந்திரம் மூலம் விரைவாக நீர் நிரப்பப்படுகிறது. 24 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் ஒரு பெட்டிக்கு 900 லிட்டர் என்ற வீதத்தில் 21,600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. மொத்தமாக ஒரு நாளைக்கு சுமார் 28.73 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த ரயில்களில் நிரப்பப்படுகிறது
 
ஈரோடு ரயில்நிலையத்திற்கு தேவையான தண்ணீர் இது வரை காவிரி ஆற்றில் இருந்து கிடைத்தவந்தது. ஆனால், தற்போது காவிரி ஆறு முற்றிலும் வறண்டு விட்டதால், காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ரயில்வே நிலங்களில் போர்வெல்கள் மூலம் நீர் எடுத்து, சுத்திகரிக்கப்பட்டு ஈரோடு ரயில்நிலைய உபயோகத்திற்கு அனுப்பப்படுகிறது.  இந்த தண்ணீர் மிகவும் சேறாக உள்ளதால், சேலம் கோட்ட பொறியியல் துறை அதிகாரிகள் இந் நீரை சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்து அனுப்பி வருகின்றனர். ஆனால், நீரின் குறைந்த தரத்தால், சுத்திகரிப்பு இயந்திரத்தின் பில்டர்கள் (filters) அடிக்கடி பழுதாகி சுத்திகரிப்பு பணிகள் தடை படுகின்றன. எனவே, அவற்றை பழுதுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சில நாட்கள் வரை சேலம் கோட்ட ரயில்நிலையங்களுக்கு வரும் வழியில் உள்ள ஜோலார்பேட்டை, திண்டுக்கல், பாலக்காடு போன்ற ரயில்நிலையங்களுக்கு ரயில்களில் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


எனவே, பயணிகள், தற்போது நிலவி வரும் அதிகப்படியான தண்ணீர் தட்டுப்பாடு சூழலையும் அதை சமாளிக்க சேலம் கோட்டம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு, ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், ரயில்களை நிறுத்தும் செயலில் மற்றும் ரயில்வே சொத்துக்களை சேதமாக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment