Wednesday 13 December 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சேலம் கிழக்கு ரயில்வே காலனியில் இலவச எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் துவக்கம்







ரயில்வே அமைச்சகம் மின் சேமிப்புக்காக குறைந்த அளவில் மின்சக்தி உபயோகிக்கும் உபகரணங்கள் மற்றும் காற்றாலை சூரிய மின்சக்தி அமைப்பு போன்ற மறுசுழற்சி மின்தயாரிப்பு உபகரணங்களை நிறுவுவதன் மூலம் இந்திய ரயில்வேயை மின்சேமிப்பில் முன்னணி நிறுவனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சேலம் கோட்டம் சார்பில் மின் சேமிப்பு பற்றி ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமும், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதன் மூலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புகளில் உள்ள சாதாரண குழல் விளக்குகளை மாற்றி மின்சக்தி சேமிக்கும் எல்ஈடி குழல்விளக்குகளை இலவசமாக வழங்க துவக்கியுள்ளது. இதற்கு முன்னர் போத்தனூர், கோயம்புத்தூர் மற்றும் கரூரில் ஒரு ரயில்வே குடியிருப்புக்கு இரண்டு எல்ஈடி குழல் விளக்குகள் வீதம் 725 குடியிருப்புக்களில் 1450 எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இன்று (13.12.2017) முதல் சேலத்தில் உள்ள 400 குடியிருப்புக்களுக்கு 800 எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் செய்யும் பணி தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சேலம் கோட்ட செயலாளர் திரு எம். கோவிந்தன் அவர்கள் முன்னிலையில் துவக்கப்பட்டது. சாதாரண 52 வாட் குழல் விளக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த எல்ஈடி குழல் விளக்குகள் 18 வாட் மின்சக்தியில் ஒளிதரக்கூடியவை.  இதனால், சேலத்தில் உள்ள ரயில்வே குடியிருப்புக்களில் மட்டும் சுமாராக 27,200 வாட் மின்சக்தி சேமிக்கப்படும்.


ஏற்கனவே, சேலம் கோட்டத்தில் சூரிய சக்தியில் மின்சக்தி தயாரிக்கும் அமைப்புகள் சேலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், சின்ன சேலம், ஆத்தூர், சேலம் டவுன், முக்காசாபரூர் போன்ற ரயில்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.  சூரியசக்தியால் இயங்கும்  வாட்டர்ஹீட்டர்கள் அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன், கோயம்புத்தூர் மயிலாடுதுறை இடையே இயங்கும் ஜனசதாப்தி ரயிலில் 6 பெட்டிகளின் மேற்கூரையில் சூரியமின்சக்தி தகடுகள் 20 லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்டு மின்சக்தி சேமிக்கப்பட உள்ளது. இத்தகு மின்சக்தி சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சேலம் கோட்டத்தை சிறந்த மின்சக்தி சேமிப்பு கோட்டமாக மாற்ற பணியாற்றிவரும் சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் திரு நசீர் அகமது மற்றும் இதர மின்பிரிவு அதிகாரிகள், பணியாளர்களையும் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா பாராட்டினார்  

No comments:

Post a Comment