Friday 29 December 2017

27 மணி நேரம் தொடர்ந்து ஊழியர் குறை கேட்புக் கூட்டம் நடத்தியது தெற்கு ரயில்வே சேலம் கோட்டம்




ரயில்வே ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணவும், ரயில்வேயை மேம்படுத்த அவர்களது கருத்துக்களை கேட்கவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட  நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவற்றிற்கு தீர்வு காண்பது வழக்கம்.

2017ம் ஆண்டுக்கான ஊழியர் குறை கேட்புக்கூட்டம் 28.12.2017 காலை 11 மணிக்கு துவங்கி 29.12.2017 மதியம் 2.30 மணி வரை சேரலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர் திரு எம். கோவிந்தன் அவர்கள் மற்றும்  தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் இதர உறுப்பினர்களுடன் கிட்டத்தட்ட 27 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு பெருமாள் நந்தலால். கோட்ட முதுநிலை நிதி மேலாளர் டாக்டர் உமா மகேஸ்வரி, முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின், முதுநிலை மின்பொறியாளர்கள் திரு எம்.பிரபாகரன், திரு நசீர் அகமது, கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு எஸ். திருமுருகன் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


சேலம் மருத்துவக்கூடத்தை கோட்ட துணை முதன்மை மருத்துவ மனையாக மேம்படுத்துதல், சேலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்தல், சேலம் கோட்ட ரயில்வே குடியிருப்புகளில் பூங்காக்கள் அமைத்தல், பழைமையான இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புக்களை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுதல், அனைத்து ஊழியர் குடியிருப்புக்களுக்கும் இலவச எல்ஈடி குழல் விளக்குகள் வழங்குதல், சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீரை அனைத்து அலுவலகங்களுக்கும் ரயில்நிலையங்களுக்கும் வழங்குதல், பெண் ஊழியர்களுக்கு உடைமாற்றும் அறை இல்லாத இடங்களில் அத்தகு வசதியை நிறுவுதல் உள்ளிட்ட 420 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் சேலம் ரயில்வே  கோட்ட மேலாளரின் அதிகாரத்திற்கு உட்பட்டு செய்யக்கூடிய 412 கோரிக்கைளின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு திரு வர்மா ஆணை பிறப்பித்தார். கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட 8 கோரிக்கைகளுக்கு தெற்கு ரயில்வே தலைமையகத்தை அணுகுமாறு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். தங்களது பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்கப்பட்டது குறித்து சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

No comments:

Post a Comment