கோட்ட மேலாளர் குத்துவிளக்கேற்றுகிறார்
சேலத்தை சேர்ந்த உறுப்பினர் திரு ஜெயசீலன் விளக்கேற்றுகிறார்
கோவையை சேர்ந்த உறுப்பினர் திரு பாலசுப்பிரமணியன் விளக்கேற்றுகிறார்
ஆலோசனைக்கூட்டம்
சேலம்
கோட்ட ரயில்உபயோகிப்போர் குழு ஆலோசனைக்கூட்டம் இன்று சேலம் கோட்ட அலுவலகத்தில் சேலம்
ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் சேலம்,
ஈரோடு, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த 21 உறுப்பினர்கள்
கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையத்தை
சேர்ந்த திரு ராஜேந்திரன் அவர்கள் துடியலூர் ரயில் நிலைய கட்டிடப் பணிகள் குறித்து
கேட்ட போது, ஜுன் 2017 இறுதிக்குள் கட்டிடப்பணிகள் முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும்,
பணிகள் நிறைவடைந்தவுடன், ரயில்நிலையம் செயல்படத் துவங்கும் என்றும் திரு ஹரிசங்கர்
வர்மா பதிலளித்தார். மேட்டுப்பாளையத்தில் இருந்து
புதியதாக நிறுவப்பட்டுள்ள போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில்பாதையில் ரயில்கள் இயக்குவது
பற்றிய கேள்விக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரைக்கு புதிய ரயில் உள்பட இத்தடத்தில்
11 புதிய ரயில்கள் இயக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுள் 4 ரயில்கள் முந்தைய
மீட்டர் கேஜ் தடத்தில் இயக்கத்தில் இருந்தவை என்றும் திரு வர்மா சொன்னார். மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாடு பற்றிக்குறிப்பிட்ட
திரு.வர்மா தற்போது மேட்டுப்பாளைய ரயில்தடங்களின் நீளத்தை அதிகரிக்க வேலைகள் நடந்து
வருவதாகவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி கிடைத்ததும் வேலைகள் முடிக்கப்பட்டு
மேட்டுப்பாளையத்தை ஒரு முக்கிய ரயில்நிலையமாக ஆக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
கோயம்புத்தூரை
சேர்ந்த திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் கோவை ரயில்நிலையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்த
வசதி குறித்து கேட்ட போது, சென்ற முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போது, யாரும் அதற்கு
விண்ணப்பிக்கவில்லை என்றும் மறுபடியும் ஒப்பந்தப்புள்ளிகள் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாகவும், வாகன நிறுத்த ஒப்பந்ததாரர் அதிக வாடகை வசூலிப்பது குறித்து கடந்த ஆண்டில்
18 புகார்கள் வந்ததின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும்,
தற்போது தற்காலிகமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் புகார்கள் ஏதும்
வரவில்லை என்றும் பதிலளித்தார். மேலும் நிறுத்தக்கட்டணங்கள் ஆங்காங்கே எழுதி வைக்கப்பட
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
திருப்பூரை
சேர்ந்த திரு சுரேஷ்குமார் அவர்கள் பார்சல்களை ஏற்ற வசதியாக ரயில்களை மேலும் 5 நிமிடம்
நிறுத்த வேண்டும் என்று கோரியதற்கு ரயில்களை அட்டவணைப்படி இயக்க 5 நிமிடம் வரை மட்டுமே
நிறுத்த முடியும் என்று பதிலளித்த திரு வர்மா, திருப்பூரில் தற்போது நிற்காத நாகர்கோவில்
ஷாலிமார் விரைவு வண்டி போன்ற ரயில்களை திருப்பூரில் நின்று செல்வது குறித்து பரிசீலிக்கப்படும்
என்று உறுதியளித்தார்.
ஈரோட்டை
சேர்ந்த திரு கௌதமன் அவர்கள் நடைமேடை எண் 3, 4ல் பயணிகள் காத்திருப்பு அறை அமைக்க வேண்டிய
போது, தற்போது சுரங்கப்பாதையில் உள்ள காத்திருப்பு அறை பெரியதாக உள்ளதால் அனைத்துப்பயணிகளும்
அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு திரு வர்மா கேட்டுக் கொண்டார். காவேரி ரயில்நிலையத்தில் சென்னை கோவை இன்டர்சிட்டி
மற்றும் ஏற்காடு போன்ற ரயில்களை நின்று செல்ல ஏற்பாடு செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு
காவேரி மற்றும் ஈரோடு ரயில் நிலையங்களிடையே தொலைவு மிகக் குறைவாக உள்ளதால் அவ்வாறு
செய்ய இயலாது என்று அவர் விளக்கமளித்தார்.
மாற்றுத்திறனாளிகள்
அமைப்பை சேர்ந்த டாக்டர் அத்தியண்ணா அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தங்களது சலுகைக்கட்டண
அட்டையை பயன்படுத்தி அனைத்து வகுப்புகளுக்கும் ரயில்நிலையங்களுக்கு செல்லாமலேயே இணையதளம்
மூலம் பயணச்சீட்டு பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது, பயணச்சலுகை
அட்டையை பயனாளிகள் தவிர மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் இருக்க பயணச்சீட்டு அலுவலகத்திற்கு
வந்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டி உள்ளது என்று திரு வர்மா விளக்கினார்.
சேலம்
ஜோலார்பேட்டை தடத்தில் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடப்பது குறித்து உறுப்பினர்கள்
கேட்ட போது, தமிழக ரயில்வே காவல் துறை அதிகாரிகளுடன் தான் தொடர்பு கொண்டு, காவல் துறை
துணை கண்காணிப்பாளர் ஒருவரை சேலத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
சொன்னார்.
புதிய
ரயில்கள் மற்றும் கொள்கை முடிவுகள் போன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு, மாண்புமிகு
பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய ரயில்வே அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டால் அவற்றை
நிறைவேற்ற முடியும் என்று கோட்ட ரயில்வே மேலாளர் விளக்கமளித்தார்.
No comments:
Post a Comment