Wednesday, 13 July 2016

சேலம் கோட்டம் கடந்த இரு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது- திரு ரவிசேகர் சின்ஹா, சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர்

 பிரச்சாரத்தில் பங்கேற்ற மாணவ மாணவியர்
 திரு ரவி சேகர் சின்ஹா உரையாற்றுகிறார்
 மாணவர்களின் கலை நிகழ்ச்சி
 பிரச்சாரத்தை திரு சின்ஹா கொடியசைத்து துவக்கி வைக்கிறார்
சேலம் ரயில் நிலைய வளாகத்தில் பிரச்சார ஊர்வலம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய பிரச்சாரத்தை சேலம் ரயில் நிலையத்தில் இன்று (13.07.2016)  சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் திரு ரவி சேகர் சின்ஹா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சேலம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகள், சாரண சாரணியர், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள், சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சேலம் வட்டமேசை அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட 5 சக்கர நாற்காலிகளை திரு சின்ஹா சேலம் கோட்டம் சார்பில் பெற்றுக் கொண்டார்.

பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் உரையாடுகையில், கடந்த 2 ஆண்டுகளில் பயணிகள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சேலம் கோட்டம் தலைசிறந்து விளங்கி உள்ளதாகவும், சேலம் ரயில் நிலையத்தில் நிலைய கட்டிட விரிவாக்கம், பிளாட்பாரம் எண் 1 மற்றும் 3/4ல் மின்தூக்கிகள் (lifts), அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் நடைமேம்பாலம், புதிய பயணிகள் காத்திருப்பு அறை, புதிய கட்டண குளிர்வசதி காத்திருப்பு அறை, தானியங்கி பயணச் சீட்டு இயந்திரங்கள் போன்றவை செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.  மேலும் நடைமேடை 1 மற்றும் 3/4ல் மின்நகரும் படிக்கட்டுகள் (escalators) தயாராகி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் அவை பயன்பாட்டுக்கு வரும் என்றும் சொன்னார்.  சேலம் ரயில்நிலையத்தின் 2வது நுழைவுவாயில் மற்றும் 5வது நடைமேடை விரிவாக்கப்பணிகள் துவக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

மேலும், புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் நடைமேம்பாலம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாமல்பட்டி மற்றும் சின்ன சேலம் ரயில்நிலையங்களில் அத்தகு நடைமேடைகள் விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்த திரு சின்ஹா, சேலம், ஆத்தூர், திருப்பூர் ரயில்நிலையங்களில் சூரியசக்தியால் மின் உற்பத்தி செய்யும் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.  சேலம் கோட்ட பாதுகாப்புப் பிரிவின் இடைவிடாத விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் விளைவாக, ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகளில் இந்த ஆண்டில் விபத்து ஏதும் நிகழவில்லை என்று சொன்ன அவர், பயணிகள் தொலைபேசி புகார் 138, 182 மற்றும் பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக பெறப்படும் புகார்கள் உடனடியாக சரி செய்யப்படுவதால் சேலம் கோட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் சொன்னார். 


பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சேலம் ரயில் நிலையத்தில் வளாகத்தில் ரயில்நிலைய வளாகத்தில் சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பதாகைகள் ஏந்தி பிரச்சாரத்தில் டுபட்டனர்.  மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் மா.விக்னவேலு, சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு. விஜு வின் மற்றும், சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment