Sunday, 24 July 2016

ரயில்களில் பாதுகாப்பாகவும் சுகமாகவும் பயணம் செய்ய முன்வருவதன் மூலம் இந்திய ரயில்வேக்கு ஒத்துழைக்க ரயில்பயணிகளுக்கு சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் வேண்டுகோள்







சேலம் ரயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு உதவும் வகையில் நடைமேடை 1 மற்றும் 3/4ல் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 நகரும் மின்படிக்கட்டுக்களை மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்கள் இன்று (24.07.2016) காலை சென்னை சென்ட்ரலில் இருந்து காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். 

திரு சுரேஷ் பிரபு அவர்கள் தனது உரையின் போது ரயில்வே அமைச்சகம் தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், ஒவ்வோர் ஆண்டும் தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சேலம் ரயில்நிலைய நகரும் மின்படிக்கட்டுகளை துவக்கி வைத்த அதே நேரத்தில் சேலம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் மதிப்பிற்குரிய விருந்தினர்கள், சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் முன்னிலையில் திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் உரையாடுகையில் சேலம் கோட்ட மேலாளர் மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் அவர்கள் உரையில் குறிப்பிட்ட படி, பயணிகள் வசதிகளை மேம்படுத்த இந்திய ரயில்வே அதிகமாக செலவிட்டு வருவதாகவும், சேலம் கோட்டத்திலும் இது போன்று பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  சேலம் ரயில்நிலையத்தின் 2வது நுழைவுவாயிலுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், ஈரோடு ரயில்நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் துவக்கப்படும் என்றும் சொன்னார். 

இந்திய ரயில்வே பயணிகள் ரயில் சேவைக்கு மிக அதிக முக்கியத்துவம் தருவதாகவும், தற்போது சேலம் கோட்டத்தில் ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்பட்டு வருவதாகவும் சொன்னதுடன், பொதுமக்கள் ரயில்களில் பெருமளவில் பயணம் செய்ய முன்வந்தால், ரயில்வேயின் வருவாய் அதிகரித்து மேலும் பல பயணிகள் வசதி மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த இயலும் என்றும் தெரிவித்தார்.  ரயில்நிலையங்களை சுத்தமாக பராமரிக்க பயணிகளின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் சொன்னார்.


பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தற்போது கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் வைபை வசதி நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அது சேலம் மற்றும் ஈரோடு ரயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் சொன்னார்.  சேலத்திலிருந்து சென்னைக்கு ஜோலார்பேட்டை மற்றும் விருத்தாசலம் வழியாக பகல் நேர ரயில் இயக்கம், கோயம்புத்தூரிலிருந்து பங்களூருக்கு இரவு நேர ரயில், மற்றும் சென்னை எழும்பூர் சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிப்பு ஆகியவை குறித்து தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment