Friday, 23 September 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இன்று (2016 செப்டம்பர் 23) தூய்மை விளக்க தினம் அனுசரிப்பு








தூய்மை வாரத்தின் ஏழாவது நாளான இன்று 23.09.2016 (வெள்ளிக்கிழமை)-  தூய்மை விளக்க தினமாக சேலம் கோட்டத்தில் அனுசரிக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தூய்மை வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். 


மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களும் மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் அவர்களும் அனைத்து பொது இடங்களையும், முக்கியமாக ரயில்நிலையங்களை சுத்தமாக பராமரிப்பது குறித்து மிகவும் முக்கியத்துவம தருவதால், ரயில்நிலைய வளாகங்களை தூய்மையாக பராமரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொன்ன அவர், அதன் ஒரு பகுதியாக தற்போது நடைபெற்று வரும் தூய்மை வாரத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நடவடிக்கை வீதம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.  இந்திய ரயில்வேயில் கோட்டத் தலைமையகங்களில் உள்ள ரயில்நிலையங்களில் மிகச் சிறந்த தூய்மை ரயில்நிலையமாக முதலிடத்தை சேலம் ரயில்நிலையம் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மிகத் தூய்மையான ரயில்நிலையங்களில் பட்டியலில் ஈரோடு ரயில்நிலையமும் இடம் பெற்றிருப்பதாகம் தெரிவித்தார்.  ரயில்பயணிகளின் ஒத்துழைப்பினாலேயே இது சாத்தியமானதாகவும், அந்த ஒத்துழைப்பு தொடரும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.

சேலம் கோட்டம் பயணிகளின் வசதி மேம்பாட்டுக்கு பெரும் முக்கியத்துவம் தந்து வருவதாக தெரிவித்த அவர், சேலம் ரயில்நிலையத்தில் நகரும் மின் ஏணிகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், இன்னும் 7 அல்லது 8 மாதங்களுக்குள் சேலம் ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனப் பங்கேற்புடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் திரு. வர்மா சொன்னார்.  சேலம் ரயில்நிலையத்தில் முன்கட்டணம் செலுத்தப்பட்ட ஆட்டோ மையம் (Prepaid Auto Centre) அமைக்க தமிழக காவல் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் சொன்ன அவர், சேலம் சென்னை எழும்பூர் ரயிலில் நடந்தது போன்ற பணக்கொள்ளைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சிறப்பு ரயில்பெட்டிகள் வடிவமைக்க பாரத ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

சேலம் ரயில்நிலையத்தில் பல்லடுக்கு கார்நிறுத்துமிடம் (Multi Level Car Parking) அமைக்க திட்டமிட்டிருப்பதால், சேலம் ரயில்நிலையம் முன்பு வாகன நிறுத்த இடப்பற்றாக்குறை தீர்க்கப்படும் என்றும், சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் அமைக்கும் திட்டப்பணிகள் துவக்கப்பட்டு, இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.  சேலம் ரயில்பயணிகளுக்கு உதவ சேலம் ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும் புதிய தடப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், தற்போது ரயில்நிலையம் முன்னர் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் உள்ள மரங்களை வேறிடத்திற்கு மாற்றி விரிவாக்கம் செய்ய உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஈரோடு சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்களின் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வழக்கமான ரயிலாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தற்போதைக்கு 14,10,2016 வரை இயக்க முன்னர் திட்டமிட்டதற்கு பதிலாக இந்த ரயில்கள் 30.10.2016 வரை அதாவது தீபாவளி சிறப்பு ரயில்களாக அதிக நாட்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் சொன்னார்.  இந்த ரயில்கள் சேலம் விருத்தாசலம் மார்க்கத்தில் உள்ள ரயில்பயணிகளுக்கு பெரிதும் உதவும் என்றும் சொன்னார். 

பின்னர், சேலம் ரயில் நிலைய நடைமேடைகளையும், ரயில் எண்- 16339 மும்பை நாகர்கோவில் விரைவு ரயிலின் சமையலறைப் பெட்டியையும் பார்வையிட்ட அவர், அங்குள்ள சுத்தம் குறித்து திருப்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment