Friday 29 December 2017

27 மணி நேரம் தொடர்ந்து ஊழியர் குறை கேட்புக் கூட்டம் நடத்தியது தெற்கு ரயில்வே சேலம் கோட்டம்




ரயில்வே ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணவும், ரயில்வேயை மேம்படுத்த அவர்களது கருத்துக்களை கேட்கவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட  நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவற்றிற்கு தீர்வு காண்பது வழக்கம்.

2017ம் ஆண்டுக்கான ஊழியர் குறை கேட்புக்கூட்டம் 28.12.2017 காலை 11 மணிக்கு துவங்கி 29.12.2017 மதியம் 2.30 மணி வரை சேரலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர் திரு எம். கோவிந்தன் அவர்கள் மற்றும்  தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் இதர உறுப்பினர்களுடன் கிட்டத்தட்ட 27 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு பெருமாள் நந்தலால். கோட்ட முதுநிலை நிதி மேலாளர் டாக்டர் உமா மகேஸ்வரி, முதுநிலை வணிக மேலாளர் திரு விஜுவின், முதுநிலை மின்பொறியாளர்கள் திரு எம்.பிரபாகரன், திரு நசீர் அகமது, கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு எஸ். திருமுருகன் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


சேலம் மருத்துவக்கூடத்தை கோட்ட துணை முதன்மை மருத்துவ மனையாக மேம்படுத்துதல், சேலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்தல், சேலம் கோட்ட ரயில்வே குடியிருப்புகளில் பூங்காக்கள் அமைத்தல், பழைமையான இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புக்களை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுதல், அனைத்து ஊழியர் குடியிருப்புக்களுக்கும் இலவச எல்ஈடி குழல் விளக்குகள் வழங்குதல், சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீரை அனைத்து அலுவலகங்களுக்கும் ரயில்நிலையங்களுக்கும் வழங்குதல், பெண் ஊழியர்களுக்கு உடைமாற்றும் அறை இல்லாத இடங்களில் அத்தகு வசதியை நிறுவுதல் உள்ளிட்ட 420 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் சேலம் ரயில்வே  கோட்ட மேலாளரின் அதிகாரத்திற்கு உட்பட்டு செய்யக்கூடிய 412 கோரிக்கைளின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு திரு வர்மா ஆணை பிறப்பித்தார். கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட 8 கோரிக்கைகளுக்கு தெற்கு ரயில்வே தலைமையகத்தை அணுகுமாறு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். தங்களது பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்கப்பட்டது குறித்து சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

Friday 15 December 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2017ம் ஆண்டுக்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம்

 
DRM addressing the gathering
 Sri S. Thirumurugan, DPO welcoming the gathering
Pensioners and beneficiaries gathered in the Adalat

இந்திய ரயில்வே ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை தீர்ப்பதற்கு ஆண்டில் இருமுறை குறைதீர்ப்பு மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம் இன்று (15.12.2017) தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. இம் மன்றத்தில் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா தலைமை ஏற்றார்.  62ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த மன்றத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஓய்வூதியர்களுக்கு உதவ அழைக்கப்பட்டிருந்தனர். சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு எஸ். திருமுருகன்மற்றும் இதர கோட்ட  அதிகாரிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா, இந்திய ரயில்வேயில் குறிப்பாக சேலம் கோட்டத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நலனில் முழு கவனம் செலுத்தி அவர்களது குறை தீர்க்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு தேவையான கவனம் செலுத்தி வரும் சேலம் கோட்ட பணியாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். 

மொத்தம் 62 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதில், 35 மனுக்கள் அனுமதிக்கப்பட்டு, 48,05,333 ரூபாய் நிவாரணமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  இதர மனுக்கள் நடைமுறையில் உள்ள விதிகளுக்கு புறம்பாக இருந்ததாலும்  போதிய ஆவணங்கள் இல்லாததாலும், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலவில்லை.


குறை தீர்ப்பு மன்றத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் சேலம் கோட்ட நிர்வாகம் தங்களது குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

Wednesday 13 December 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சேலம் கிழக்கு ரயில்வே காலனியில் இலவச எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் துவக்கம்







ரயில்வே அமைச்சகம் மின் சேமிப்புக்காக குறைந்த அளவில் மின்சக்தி உபயோகிக்கும் உபகரணங்கள் மற்றும் காற்றாலை சூரிய மின்சக்தி அமைப்பு போன்ற மறுசுழற்சி மின்தயாரிப்பு உபகரணங்களை நிறுவுவதன் மூலம் இந்திய ரயில்வேயை மின்சேமிப்பில் முன்னணி நிறுவனமாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சேலம் கோட்டம் சார்பில் மின் சேமிப்பு பற்றி ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமும், சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதன் மூலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புகளில் உள்ள சாதாரண குழல் விளக்குகளை மாற்றி மின்சக்தி சேமிக்கும் எல்ஈடி குழல்விளக்குகளை இலவசமாக வழங்க துவக்கியுள்ளது. இதற்கு முன்னர் போத்தனூர், கோயம்புத்தூர் மற்றும் கரூரில் ஒரு ரயில்வே குடியிருப்புக்கு இரண்டு எல்ஈடி குழல் விளக்குகள் வீதம் 725 குடியிருப்புக்களில் 1450 எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இன்று (13.12.2017) முதல் சேலத்தில் உள்ள 400 குடியிருப்புக்களுக்கு 800 எல்ஈடி குழல் விளக்குகள் விநியோகம் செய்யும் பணி தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சேலம் கோட்ட செயலாளர் திரு எம். கோவிந்தன் அவர்கள் முன்னிலையில் துவக்கப்பட்டது. சாதாரண 52 வாட் குழல் விளக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்த எல்ஈடி குழல் விளக்குகள் 18 வாட் மின்சக்தியில் ஒளிதரக்கூடியவை.  இதனால், சேலத்தில் உள்ள ரயில்வே குடியிருப்புக்களில் மட்டும் சுமாராக 27,200 வாட் மின்சக்தி சேமிக்கப்படும்.


ஏற்கனவே, சேலம் கோட்டத்தில் சூரிய சக்தியில் மின்சக்தி தயாரிக்கும் அமைப்புகள் சேலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், சின்ன சேலம், ஆத்தூர், சேலம் டவுன், முக்காசாபரூர் போன்ற ரயில்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.  சூரியசக்தியால் இயங்கும்  வாட்டர்ஹீட்டர்கள் அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன், கோயம்புத்தூர் மயிலாடுதுறை இடையே இயங்கும் ஜனசதாப்தி ரயிலில் 6 பெட்டிகளின் மேற்கூரையில் சூரியமின்சக்தி தகடுகள் 20 லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்டு மின்சக்தி சேமிக்கப்பட உள்ளது. இத்தகு மின்சக்தி சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சேலம் கோட்டத்தை சிறந்த மின்சக்தி சேமிப்பு கோட்டமாக மாற்ற பணியாற்றிவரும் சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் திரு நசீர் அகமது மற்றும் இதர மின்பிரிவு அதிகாரிகள், பணியாளர்களையும் சேலம் ரயில்வே கோட்ட  மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா பாராட்டினார்  

Thursday 7 December 2017

சேலம் ரயில்நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனுக்காக பேட்டரியால் இயங்கும் கார் சேவை அறிமுகம்




சேலம் ரயில்நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனுக்காக பேட்டரியால் இயங்கும் கார் சேவைக்காக வெகு நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட போது, இலவச சேவை வழங்க யாரும் விண்ணப்பிக்கவில்லை. எனவே, ரயிலில் வந்து இறங்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு உள்ள இடங்களுக்கு போகவும், அது போல, அத்தகு இடங்களில் இருந்து ரயில் பெட்டிகள் உள்ள இடத்திற்கு செல்லவும் உதவும் வகையில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துடன் கலந்து ஆலோசித்து கட்டண அடிப்படையிலான பேட்டரியால் இயங்கும் கார் சேவையை துவக்க ஆணையிட்டார். 

அதன்படி சேலம் ரயில்நிலையத்தில் நடைமேடை எண், 3 மற்றும் 4ல் பேட்டரியால் இயங்கும் கார் சேவை சேலம் கோட்ட வணிக மேலாளர் திரு. கே. மாது அவர்களால் சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் திரு எம். ஷாஜஹான் மற்றும் சேலம் ரயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.   இந்த சேவைக்காக சென்னையை சேர்ந்த ஷட்டில் கார் நிறுவனத்துடன் 5 வருட காலத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்ததாரர் பேட்டரியால் இயங்கும் காருக்கான பராமரிப்பு, இயக்குநர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயணிக்கு ரூ. 10 என்ற வகையில் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.  மூத்த குடிமக்கள், உடல் நலம் குன்றிய பயணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் வசதிக்காக துவக்கப்பட்டுள்ள இந்த பேட்டரியால் இயங்கும் காரில் ஒரு நேரத்தில் 4 பேர் பயணிக்கலாம்.  தங்களது கைப்பைகள் தவிர மற்ற பெட்டிகளை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை.  இந்த பேட்டரியால் இயங்கும் கார் சேவையை உபயோகிக்க விரும்பும் பயணிகள் சேலம் ரயில்நிலையத்தில் 08939806986 என்ற எண்ணை அழைக்க வேண்டும். வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் வழங்கப்படும் இந்த கார் சேவை ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்படும்.


இது குறித்து பேசுகையில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா இத்தகு சேவை விரைவில் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ரயில்நிலையங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றும் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.  

Tuesday 5 December 2017

கோயம்புத்தூர் பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் மேம்பாலம் கட்டும் பணிக்காக 07.12.2017 முதல் மூடப்படுகிறது

ரயில்தட விபத்துக்களை குறைக்க இந்திய ரயில்வே மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் பீளமேடு மற்றும் வடகோயம்புத்தூர் இடையே உள்ள ஆவாரம்பாளையம் லெவல் கிராசிங் 07.12.2017 முதல் மூடப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட உள்ளது.  சத்தி ரோடு மற்றும் புது சித்தாப்பூர் ரோடு வழியாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக இந்திய ரயில்வே மற்றும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை இணைந்து நிதி ஒதுக்கீடு  26 கோடி ரூபாய் செய்துள்ளன. மேம்பாலப் பணிகள் 30.09.2018க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இரு வழிப்பாதையாக அமையும் இம்மேம்பாலத்தின் அகலம் 12 மீட்டராகவும், நீளம் கணபதி முனையில் 450 மீட்டரும், காந்திபுரம் முனையில் 320 மீட்டரும் இருக்கும். பொதுமக்கள் மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.