Saturday 26 December 2015

கரூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகளை மாண்புமிகு நாடாளுமன்ற துணை சபாநாயகர் இன்று (26.12.2015) திறந்து வைத்தார்


 இடமிருந்து வலம்: சேலம்  ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு, மாண்புமிகு பாராளுமன்ற துணை சபாநாயகர் முனைவர் எம்.தம்பிதுரை, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ். ஜெயந்தி
கரூர் ரயில்நிலையத்தின் முகப்புத் தோற்றம்
 குளிர் வசதி செய்யப்பட்ட பயணிகள் தங்கும் அறை
 குளிர் வசதியற்ற சாதாரண பயணிகள் தங்கும் அறை
 பயணிகள் தங்கும் அறை கட்டணம் மற்றும் தங்கியுள்ளோர் விபரப் பலகை
 மாண்புமிகு பாராளுமன்ற துணை சபாநாயகர் முனைவர் எம்.தம்பிதுரை அவர்கள் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்
மாண்புமிகு பாராளுமன்ற துணை சபாநாயகர் முனைவர் எம்.தம்பிதுரை அவர்கள் தானியங்கி பயணச் சீட்டு இயந்திரத்தை  பார்வையிடுகிறார்


கரூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகளை மாண்புமிகு நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர்  டாக்டர் எம். தம்பிதுரை அவர்கள் இன்று (26.12.2015), சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி எஸ். ஜெயந்தி, மற்றும் பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்

தங்கும் அறைகளை திறந்து வைத்த பின்னர் அந்த அறைகளை பார்வையிட்டதுடன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்களுடன், கரூரில் மேற்கொள்ளப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்து விவாதித்தார்.  அப்போது அவர் தான் மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர்  திரு. சுரேஷ் பிரபு அவர்களை சந்தித்து, கரூரை மற்ற முக்கிய இடங்களுடன் இணைக்கும் வகையில், கீழ்க்கண்ட ரயில்களை இயக்க கோரிக்கை வைத்ததாகவும், ரயில்வே அமைச்சரும் அவற்றை நிச்சயம் பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

சேலம் தஞ்சாவூர் பயணிகள் ரயில் – நாமக்கல் கரூர் திருச்சி வழியாக
சேலம் மதுரை பயணிகள் ரயில் –   கரூர் திண்டுக்கல் வழியாக
கரூர் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் –  ஈரோடு திருப்பூர் வழியாக
கரூர் சென்னை விரைவு ரயில் –  சேலம் ஜோலார்பேட்டை வழியாக

பின்னர் டாக்டர் தம்பிதுரை அவர்கள் புதியதாக கரூர் ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதி நவீன நாணயம், ரூபாய் நோட்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு மூலம் இயங்கும் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை பார்வையிட்ட போது, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் இந்த இயந்திரங்கள் பயணிகள் கூட்ட நெரிசலின் போது எளிதாக பயணச்சீட்டு வாங்க உதவும் என்று தெரிவித்தார்.  கரூர் ரயில்  நிலையத்தில் பயணிகள் வசதிக்காக சேலம் ரயில்வே கோட்டம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் தம்பிதுரை அவர்கள் பாராட்டு தெரிவித்தார். 


கரூர் ரயில்நிலையத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள 3 தங்கும் அறைகளில் 1 குளிர்வசதி கொண்டது, மற்ற இரு அறைகள் சாதாரண குளிர்வசதியற்ற அறைகளாகும்.  இவை 35 லட்ச ரூபாய்கள் திட்ட மதிப்பீட்டில் கட்டி நிறைவு செய்யப்பட்டுள்ளன.  குளிர் வசதி அறைக்கு 12 மணி நேரத்திற்கு 400 ரூபாய்களும், 24 மணி நேரத்திற்கு 800 ரூபாய்களும், குளிர் வசதியற்ற சாதாரண அறைக்கு 12 மணி நேரத்திற்கு 300 ரூபாய்களும், 24 மணி நேரத்திற்கு 600 ரூபாய்களும் கட்டணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் விரைவிலேயே இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய வசதி செய்யப்படும். 

நிகழ்ச்சியின் போது, சேலம் கோட்ட  முதுநிலை வணிக மேலாளர் திரு கே.பி.தாமோதரன், சேலம் கோட்ட ஒருங்கிணைப்புப் பொறியாளர் திரு மா.விக்னவேலு, மற்றும் இதர கோட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். 

Tuesday 22 December 2015

சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழுவின் 15வது கூட்டம் இன்று (22.12.2015) நடைபெற்றது.

இடமிருந்து வலம் முதுநிலை வணிக மேலாளர் மற்றும் குழுவின் செயலர் திரு.கே.பி.தாமோதரன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு. ஆர்.எஸ்.சின்ஹா, 
 முதுநிலை வணிக மேலாளர் மற்றும் குழுவின் செயலர் திரு.கே.பி.தாமோதரன், உரையாற்றுகிறார்
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகள்

சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழுவின் 15வது கூட்டம் இன்று (22.12.2015) சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு. ஆர்.எஸ்.சின்ஹா, முதுநிலை வணிக மேலாளர் மற்றும் குழுவின் செயலர் திரு.கே.பி.தாமோதரன், முதுநிலை இயக்க மேலாளர் திரு. .ஹரிகிருஷ்ணன், மற்றும் சேலம் கோட்ட துறை அதிகாரிகளுடன், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், மேட்டுப்பாளையம், காங்கேயம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல்லில் இருந்து வந்திருந்த குழு உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முதுநிலை வணிக மேலாளர் மற்றும் குழுவின் செயலர் திரு.கே.பி.தாமோதரன், வந்திருந்தோரை வரவேற்ற போது, சேலம் கோட்டம் ரயில் நிலைய வளாகங்களில் தூய்மை மேம்பாட்டிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், குழு உறுப்பினர்கள் இந் நடவடிக்கைகளில் பங்கேற்குமாறும் கேட்டுக் கொண்டார்.

உறுப்பினர்களிடையே உரையாற்றுகையில், சேலம் கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு, கோட்ட மேலாளர் என்ற முறையில் உறுப்பினர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அனைத்து ரயில் நிலையங்களிலும் ஊழியர் சங்கங்கள் ஒட்டியிருந்த சுவரொட்டிகள் நீக்கப்பட்டுள்ளதுடன, இனிமேல் அது போன்று சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என அந்த அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சேலம் கோட்டத்திற்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற,  வழக்கமான அலுவலக முறைகளுடன், மக்களின் பிரதிநிதிகளான எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏக்களை ரயில்வே கோட்ட மேலாளர் என்ற முறையில் நேரில் சந்தித்து இத் திட்டங்கள் நிறைவே மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்தார். சேலம் ரயில்நிலையத்தில் இரண்டாவது நுழைவு வாயில் அமைப்பதுடன் 5ம் நடைமேடைமற்றும் நடைமேம்பாலத்தை 5ம் நடைமேடை வரை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொன்னார். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ளது போன்று சேலம் ரயில் நிலையத்திலும் அனைத்து வசதிகளும் கொண்ட ரயில்நிலையக் கட்டிடம் 2வது நுழைவுவாயிலில் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். 

மேலும் அவர், கோயம்புத்தூரில் நவீன முறையிலான வட்டச்சுற்றுப்பாதை ரயில் சேவை மூலம், கோயம்புத்தூரின் முக்கிய பகுதிகளான மேட்டுப்பாளையம், வடகோயம்புத்தூர், கோயம்புத்தூர் ரயில் நிலையம், போத்தனூர், சிங்காநல்லூர் பகுதிகளை மின்தொடர் ரயில் சேவையால் இணைக்க ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.  இதனால் கோயம்புத்தூரின் முக்கிய பகுதிகள் இணைக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி பெருகும் என்றும், இது வருங்கால திட்டமாதலால், நிறைவேற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றும் சொன்னார்.

சேலம் கோட்டம் எடுத்து வரும் பயணிகள் வசதி மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், சேலம் கோட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 1, கோயம்புத்தூரில் 3, திருப்பூரில் 2, ஈரோட்டில் 2, கரூரில் 2, சேலம் டவுனில் 1, சின்ன சேலத்தில் 1, ஆத்தூரில் 1 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 15 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் ரயில்நிலையங்களில் நாணயம், ரூபாய் நோட்டு கொண்டு இயங்கும் அதிநவீன 6 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், தெரிவித்ததுடன், வடகோயம்புத்தூரில் புதிய ரயில்நிலைய கட்டிடம் கட்டுப்பட்டுள்ளதையம், கோயம்புத்தூர், சேலம், ஈரோட, திருப்பூர், ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் தங்கும் அறைகள் கணிணி மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

குழு உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும், தற்போது அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி கீழ்க்கண்ட வசதிகள் வருங்காலத்தில் செய்யப்பட உள்ளதாகவும் திரு சுப்ரான்சு தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் 4, சேலத்தில் 2, ஈரோட்டில் 2, மொத்தம் 8 நகரும் மின் ஏணிகள், escalators திருப்பூரில் 2, கோயம்புத்தூரில் 1, ஈரோட்டில் 2. மொத்தம் 5 மின்தூக்கிகள் lifts

27 ரயில்நிலையங்களில் ரயில்பெட்டிகளின் வரிசைகாட்டும் போர்டுகள், ரயில் வரும் போகும் நேரம் காட்டும் போர்டுகள், பிளாட்பாரம் எண்காட்டும் போர்டுகள், மற்றும் ரயில்வே தகவல் அறியும் தொடுதிரைகள் அதிநவீன தொழில் நுட்பம் கொண்டு அமைத்தல்,

மோகனூர், சூளூர் ரோடு, ஏற்காடு, தாராபுரம், கோபிசெட்டிபாளையம், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களில் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள்

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உதவியுடன் பயணிகள் அவசர மருத்துவ உதவி மையம்

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் முழுநீள விரைவு ரயில் பெட்டிகளை நிறுத்த வசதியாக 24 ரயில்பெட்டிகள் நிறுத்தும் நடைமேடை

பீளமேடு ரயில்நிலையத்தில் முழுநீள விரைவு ரயில் பெட்டிகளை நிறுத்த வசதியாக 24 ரயில்பெட்டிகள் நிறுத்தும் நடைமேடை

இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக்கழகத்தின் மூலம் கோயம்புத்தூரில் 12, சேலத்தில் 8, ஈரோட்டில் 10, திருப்பூரில் 4, கரூரில் 3, மேட்டுப்பாளையத்தில் 3 மொத்தம் 40 குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் 

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் ரயில்நிலையங்களில் வழக்கமான எடை பார்க்கும் கருவிகளுக்கு பதிலாக அதிநவீன பிஎம்ஐ காட்டும் கருவிகள்

கரூர் ரயில்நிலையத்தில், புதிய பயணிகள் தங்கும் அறைகள் இணையதள முன்பதிவு வசதியுடன் இம்மாத இறுதியில் துவக்கம்

இறுதியில் முதுநிலை இயக்க மேலாளர் திரு. .ஹரிகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். 

Monday 21 December 2015

புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் புதிய கட்டிடத்தை சேலத்தில் இன்று (21.12.2015) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு திறந்து வைத்தார்



புதியதாக திறக்கப்பட்ட புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் கட்டிடம்
புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் உறுப்பினர்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் கொடியை ஏற்றிவைக்கிறார்.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு உரையாற்றுகிறார்
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு குத்துவிளக்கேற்றுகிறார்
சேலம் கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஏ.கலாநிதி குத்துவிளக்கேற்றுகிறார்
 சேலம் கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எம்.நரசிம்மம் குத்துவிளக்கேற்றுகிறார்
அணிவகுத்து நிற்கும் புனித ஜான் ஆம்புலன்ஸ் படை உறுப்பினர்கள்
புனித ஜான் ஆம்புலன்ஸ் படை நாடெங்கிலும் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போது பாதிக்கப்பட்டோருக்கு உதவி புரிய ஏற்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் விபத்து உதவி மற்றும் மீட்புக்குழுவாகும். 

புதிய கட்டிட திறப்பு விழாவின் போது வரவேற்புரை வழங்கிய சேலம் கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஏ.கலாநிதி, புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் உறுப்பினர்களாக உள்ள 120 சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்கள் நாடெங்கிலும் இயற்கைப் பேரழிவுகளின் போது பாதிக்கப்பட்டோருக்கு பெருமளவில் உதவி செய்து வருவதாக தெரிவித்தார்.

விழாவில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு புனித ஜான் ஆம்புலன்ஸ் படையின் உறுப்பினர்கள் நாடெங்கிலும் இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணிகளில் ஈடுபடுவது மட்டுமன்றி தங்களின் பணியிடங்களிலும் சிறந்த பணியாற்றி வருவதாக பாராட்டினார்.  சீரான பயிற்சி மற்றும் கூட்டு முயற்சிகளின் காரணமாக, புனித ஜான் ஆம்புலன்ஸ் படை இது போன்று சிறப்பாக பணியாற்ற முடிகிறது என்றும் சொன்ன அவர் ரயில்வே துறையில் பயணிகளுடன் நேரடியாக தொடர்புடைய முன்னிலைத் தொழிலாளர்களான, பயணச்சீட்டு பரிசோதகர்கள், நிலைய மேலாளர்கள், ஏசி மெக்கானிக்குகள், பயணச்சீட்டு வழங்கும் ஊழியர்கள் போன்றோருக்கு புனித ஜான் ஆம்புலன்ஸ் படை மூலம் முதலுதவி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  இதனால், வெளியில் இருந்து உதவி வரும் வரை காத்திருக்காமல், பிரச்சினையில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக உதவ முடியும் என்றும் சொன்னார். 

சேலம் கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எம்.நரசிம்மம், இதர சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விழாவில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.  

Saturday 19 December 2015

பொம்மிடி புட்டிரெட்டிபட்டி இடையே தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் பெருமளவில் மேற்கொண்டு வரும் ரயில்தடப் பராமரிப்பு பணிகளை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு.சுப்ரான்சு இன்று (19.12.2015) பார்வையிட்டார்



கூடுதல் கோட்ட மேலாளர்,  திரு ஆர்.எஸ்.சின்ஹா,  கோட்ட மேலாளர், திரு.சுப்ரான்சு, திரு. பி. ஹரிகிருஷ்ணன்


 பொக்லைன் இயந்திரங்கள் ஜல்லிகளை அகற்றும் பணியில்
 பணியாளர்கள் பணித்தளத்தில்
 மொர்ரம் மணல் (இடது) கரும்பஞ்சுக்களிமண் (வலது)

வைப்ரேட்டரி ரோலர் இயந்திரமும் (இடது) பொக்லைன் இயந்திரங்களும் (வலது) பணியில்

பொம்மிடி மற்றும் புட்டிரெட்டிபட்டி இடையே சேலம் ஜோலார்பேட்டை மார்க்த்தில் உள்ள ரயில்தடத்தில் வழக்கமான தட ஆய்வுகளின் போது, அங்குள்ள கரும்பஞ்சுக் களிமண் காரணமாக, மழை நீர் தேங்கி ரயில்தடத்தின் ஸ்திரத்தன்மையை பாதித்து ரயில் இயக்கத்திற்கே ஒரு சவாலாக இருக்க வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  எனவே, சேலம் கோட்ட பொறியியல் பிரிவு அந்த மண்ணை மலை உச்சிகிளில் இருந்து எடுக்கப்படும் மொர்ரம் மணல் கொண்டு மாற்றி, ரயில்தடத்திற்கு திடத்தன்மை கொடுக்கவும், மழை நீர் தங்குவதை தவிர்க்கவும், ரயில் இயக்கத்தை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டது.


பொம்மிடியில் இருந்து 6 கிமீ மற்றும் புட்டிரெட்டிபட்டியில் இருந்து 6 கிமீ தூரத்தில் சுமார் 1.5 கிமீ தொலைவு கொண்ட இந்த களிமண் பகுதியில் 25.11.2015 முதல் வேலை துவக்கப்பட்டு, 10.01.2016 அன்று நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஒவ்வொரு நாளும் சுமார் 3 மணி 55 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் பணிகள், ஒரு நாளைக்கு 50 மீட்டர் என்ற கணக்கில் நடைபெறுகின்றன. 85 லட்சம் ரூபாய்கள் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த பணியில் 3 பொக்லைன் இயந்திரங்களும் 1 வைப்ரேட்டரி ரோலர் இயந்திரமும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் இம்மாதிரி பெருமளவில் இது போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி இத்தகு பணிகள் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை.  வழக்கமான ரயில்களின் இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளில் ஓவ்வொரு நாளும் 45 மேற்பார்வையாளர்களும் பணியார்களும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (19.12.2015) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்கள் நேரில் பணிகள் நடைபெறும் இடத்த சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு.ஆர்.எஸ்,சின்ஹா, கோட்டப்பொறியாளர் திரு.எம். மாரியப்பன், கோட்டத் துணைப் பொறியாளர் திரு.எம்.பி.சீனிவாசன், கோட்டமுதுநிலை இயக்க மேலாளர் திரு.பி.ஹரிகிருஷ்ணன், மற்றும் இதர கோட்ட அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.  பணிகளை மேற்பார்வையிட்ட திரு. சுப்ரான்சு அவர்கள், பணிகளை சிறப்பாக ரயில் இயக்கத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மேற்கொண்டு வரும் சேலம் கோட்ட பொறியியல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  

Tuesday 15 December 2015

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2015ம் ஆண்டுக்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம்

சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு. ரவி சேகர் சின்ஹா உரையாற்றுகிறார். அருகில் (இடமிருந்து வலம்) சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் திரு. பி. கம்பன், சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு ஜி ஜனார்த்தனன் ஆகியோர்

2015ம் ஆண்டிற்கான ஓய்வூதியர் குறை தீர்ப்பு மன்றம் இன்று (15.12.2015) தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் அருகில் உள்ள ரயில்வே அலுவலர் மன்றத்தில் நடைபெற்றது. இம் மன்றத்தில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு. ரவி சேகர் சின்ஹா தலைமை ஏற்றார்.  60 ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் ஓய்வூதியர்களுக்கு உதவ அழைக்கப்பட்டிருந்தனர். சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் திரு. பி. கம்பன், சேலம்  கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு ஜி ஜனார்த்தனன், மற்றும் இதர கோட்ட  அதிகாரிகள் இந்த  மன்றத்தில் கலந்து கொண்டனர்.

மொத்தம் 93 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதில், 48 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 7,36,197 ரூபாய்கள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  27 மனுக்கள் நடைமுறையில் உள்ள விதிகளுக்கு புறம்பாக இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டன.  போதிய ஆவணங்கள் இல்லாததால், 15 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள இயலவில்லை. 3 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விரைவில் ஆணை வழங்கப்படும்.  மேலும் குறை தீர்ப்பு மன்றத்தின் போது இன்று புதியதாக சமர்ப்பிக்கப்பட்ட 20 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் ஆணை பிறப்பிக்கப்படும். 

குறை தீர்ப்பு மன்றத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பயனாளிகள் சேலம் கோட்ட நிர்வாகம் தங்களது குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

Monday 14 December 2015

சேலம் ரயில்வே கோட்ட மருத்துவமனையில் இன்று (14.12.2015) சருமம் மற்றும் தோல் பற்றிய ஆலோசனை முகாம்






சருமம் மற்றும் தலைமுடி இன்றைய நவீன உலகில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக உள்ளது. நாள்தோறும், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுப் பழக்கங்கள், போன்றவற்றால் இந்த பிரச்சனைகள் அதிகமாகி உள்ளதுடன், சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு தேவையான அளவுக்கு கவனம் தரப்படுவதில்லை.  

இத்தகு பிரச்சனைகள் பற்றி சேலத்தில் உள்ள  ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் மருத்துவப் பிரிவு கூடுதல் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் நரசிம்மம் அவர்களது மேற்பார்வையில், கோயம்புத்தூர்  டாக்டர் தாஜ் சரும மற்றும் தலைமுடி மருத்துவமனை மருத்துவர்கள் தாஜுதீன், பிரியதர்சினி, மற்றும் ஜோதி அவர்களது தலைமையிலான மருத்துவர் குழு இன்று (14.12.2015)  சேலம் ரயில்வே காலனியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் முகாம்  ஒன்றை நடத்தினார்கள்.  

இந்த சரும மற்றும் தலைமுடி மருத்துவ ஆலோசனை முகாமில் சுமார் 200 ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சருமம் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான பரு, தழும்புகள், தலைமுடி கொட்டுதல், சருமத்தின் நிற மங்குதல், வேரிகோஸ் வெயின், தோல் சுருக்கம், கரும்புள்ளிகள், உடல் பருமன் ஆகியவற்றிற்கான  பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனையும், இலவசமாக தேவைப்பட்ட மருந்துகளும் டாக்டர் தாஜ் சரும மற்றும் தலைமுடி மருத்துவமனைக் குழுவினரால் வழங்கப்பட்டன.  அதிநவீன கருவிகள் கொண்டு  தலைப் பொடுகு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 


இது போன்ற ஒரு மருத்துவ முகாம் கோயம்புத்தூரில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்காக சமீபத்தில் நடத்தப்பட்டது. மேலும் பள்ளிக் குழந்தைகளுக்காக இது போன்ற சிறப்பு முகாம் விரைவில் ரயில்வே பள்ளிகள் உள்ள ஈரோட்டில் நடத்தப்பட உள்ளது. 

Saturday 5 December 2015

சேலம் கோட்ட ஊழியர்கள் பயன்பாட்டுக்காக ஊழியர் மனமகிழ்மன்ற புதிய கட்டிடம் இன்று திறப்பு




சேலம் ரயில்வே கோட்ட ஊழியர்களின் பயன்பாட்டிற்காக சேலம் ரயில்நிலையம் பின்புறம் உள்ள மேற்கு ரயில்வே குடியிருப்பில் புதிய மனமகிழ் மன்ற கட்டிடத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு இன்று (05.12.2015) திறந்து வைத்தார்.  சுமார் 500 பேர் உட்கார வசதி கொண்ட இந்தக் கட்டிடம் ஆலோசனைக்கூட்டம் போன்ற அலுவலக நிகழ்வுகளையும், ரயில்வே ஊழியர்களது இல்லத் திருமணம் போன்ற சொந்த விழாக்களையும் நடத்திக்கொள்ளலாம்.  பொதுமக்களுக்கும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். ஆனால், அதற்கான கட்டணம் பின்னர் நிர்ணயிக்கப்படும். ரயில்வே ஊழியர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு, கட்டணம் குறைந்த பட்சமாக நிர்ணயிக்கப்படும் 96.26 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தில், எதிர்காலத்தில், ஒரு சமையற்கூடம், உணவருந்தும் கூடம், கட்டிடத்தை சுற்றி தோட்டம் போன்றவை கட்டப்படும்.  


பின்னர், பத்திரிக்கையாளர்களுடன் உரையாடுகையில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு மத்திய ரயில்வே வாரியம் சேலத்தில் இருந்து சென்னைக்கு விருத்தாசலம் மார்க்கத்தில் தினசரி காலை நேர ரயில் இயக்க ஒப்புதல் தந்துள்ளதாகவும் இந்த ரயிலை இயக்க விரையில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ சென்னை நோக்கியும் சென்னையில் இருந்தும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருவதாகவும், நாளை மதியத்திற்குள் மழைநீர் தேக்க அளவு குறைந்தால் வழக்கமான ரயில்களை படிப்படியாக இயக்க முடியும் என்றும் தெரிவித்தார்.  சேலம் கோட்டத்திலிருந்து வெள்ள நிவாரணப்பணிகளுக்கு 32 ரயில்வேகன்களில் கட்டுமானப்பொருட்களும், அதனுடன் 90 சேலம் கோட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த திரு. சுப்ரான்சு, சேலம் கோட்டத்தில் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக நிவாரணப் பொருட்கள் அனுப்ப சேலம் கோட்டத்தை அணுகியுள்ளதாகவும், பயணிகள் ரயில்சேவை ஓரளவு சீர்செய்யப்பட்டவுடன் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சொன்னார். 

Wednesday 18 November 2015

22.11.2015 முதல் குறைந்த பட்ச சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் உயர்வு

22.11.2015 முதல், குறைந்த பட்ச சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.  இந்த கட்டண உயர்வு சென்னை போன்ற நகர்களில் உள்ள புறநகர் ரயில்களுக்கும் சீசன் டிக்கட்டுகளுக்கும் பொருந்தாது.  அட்டையிலான ரயில்பயணச்சீட்டுகள் தற்போது வழங்கப்பட்டு வரும் இடங்களில், புதிய அட்டைச் சீட்டுகள் மாற்றப்படும் வரை பழைய அட்டை ரயில் பயணச்சீட்டுகளில் புதிய கட்டணம் திருத்தப்பட்டு வழங்ககப்படும். 

Wednesday 11 November 2015

12.11.2015 முதல் ரயில்வே பயணச்சீட்டு ரத்து மற்றும் பணம் திரும்பப் பெறும் விதிகள் மாறுதல்

12.11.2015 முதல் ரயில்வே பயணச்சீட்டு ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்பப் பெறுவதற்கான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது செல்பேசி மூலம் ரயில்பயணச்சீட்டு பெறுவோர்க்கு உதவவும், இடைத்தரகர்களை ஒழிக்கவும், மின்பயணச்சீட்டினை ரத்து செய்யும் போது பயணச்சீட்டு ஒப்படைப்பு ரசீது (TDR) பெறாமலேயே தானாகவே பணம் திரும்பப் பெறவும் (01.07.2015 முதல் நடைமுறையில் உள்ளது) உதவும்.  

இந்த மாற்றங்கள்
எண்
12.11.2015க்கு முன்னர்
12.11.2015க்குப்பின்னர் மாற்றம்

1.
முன்பதிவற்ற, ரத்துக்கு பின்னர் உறுதி செய்யப்படும் (RAC), மற்றும் காத்திருப்புப்பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகள் ரத்து

i.
முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு Rs.15
முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு Rs.30


ii.
முன்பதிவு செய்த இரண்டாம் வகுப்பு மற்றும் இதர வகுப்பு பயணச்சீட்டு    Rs : 30
முன்பதிவு செய்த இரண்டாம் வகுப்பு மற்றும் இதர வகுப்பு பயணச்சீட்டு       :Rs : 60

2.
முன்பதிவு உறுதி செய்த பயணச்சீட்டுகள் ரத்து

      i.         
குறைந்த பட்ச ரத்துக்கட்டணம், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்னர்
முதல்வகுப்பு ஏசி மற்றும் அதிஉயர் வகுப்பு (executive class)                   : Rs 120
2ம் வகுப்பு ஏசி மற்றும் முதல் வகுப்பு Rs.100
3ம் வகுப்பு ஏசி, ஏசி சேர்கார் மற்றும் எக்கானமி 3ம் வகுப்பு ஏசி          : Rs.90
2ம் வகுப்பு படுக்கை வசதி         : Rs.60
2ம் வகுப்பு                                        : Rs.30
குறைந்த பட்ச ரத்துக்கட்டணம், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்னர்
முதல்வகுப்பு ஏசி மற்றும் அதிஉயர் வகுப்பு (executive class)                   : Rs 240
2ம் வகுப்பு ஏசி மற்றும் முதல் வகுப்பு               Rs.200
3ம் வகுப்பு ஏசி, ஏசி சேர்கார் மற்றும் எக்கானமி 3ம் வகுப்பு ஏசி          : Rs.180
2ம் வகுப்பு படுக்கை வசதி         : Rs.120
2ம் வகுப்பு                                        : Rs.  60


     ii.         
ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை  : 25% ஆனால், குறைந்த பட்ச ரத்துக்கட்டணம் (i)ல் உள்ளதற்கு ஏற்ப
ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை  : 25% ஆனால், குறைந்த பட்ச ரத்துக்கட்டணம் (i)ல் உள்ளதற்கு ஏற்ப


    iii.         
ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை  : 50% ஆனால், குறைந்த பட்ச ரத்துக்கட்டணம் (i)ல் உள்ளதற்கு ஏற்ப
ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை  : 50% ஆனால், குறைந்த பட்ச ரத்துக்கட்டணம் (i)ல் உள்ளதற்கு ஏற்ப

3.

பகுதியாக உறுதி செய்யப்பட்ட பணச்சீட்டு



ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்னர் வரை 
ரயில் புறப்படுவதற்கு ½ மணி நேரம் முன்னர் வரை 

4.

பயணிக்காத ஆர்ஏசி மற்றும் காத்திருப்புப்பட்டியல் பயணச்சீட்டுகள்



ரயில் புறப்படுவதற்கு 3 மணி நேரம் முன்னர் வரை எழுத்தர் கட்டணம் கழிக்கப்படும்
ரயில் புறப்படுவதற்கு ½ மணி நேரம் முன்னர் வரை எழுத்தர் கட்டணம் கழிக்கப்படும்



இந்த கால அவகாசத்திற்கு பிறகு பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு பயணம் திரும்பத் தரப்பட மாட்டாது
இந்த கால அவகாசத்திற்கு பிறகு பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு பயணம் திரும்பத் தரப்பட மாட்டாது

5.

ரயில் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மின்பயணச்சீட்டுகள் e-tickets



01.07.2015க்கு முன்னர், பணம் திரும்பப் பெற பயணச்சீட்டு ஒப்படைப்பு ரசீது (TDR) பெற வேண்டும், முன்பதிவுக் கவுண்டர் டிக்கட்டில் மாற்றமில்லை.
01.07.2015ல் இருந்து, பணம் திரும்பப் பெற பயணச்சீட்டு ஒப்படைப்பு ரசீது (TDR) பெற அவசியமில்லை, பணம் தானாகவே தரப்படும், முன்பதிவுக் கவுண்டர் டிக்கட்டில் மாற்றமில்லை.