Saturday 28 May 2016

சங்ககிரி ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு / தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்பு தொழிற்கூடங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ்

 பயணிகள் சேவை நாள் 
 சங்ககிரி ரயில் நிலையத்தில் சோதனை 
 திரு ஹரிசங்கர் வர்மா பயணிகளிடம் உரையாடுகிறார்
 ஈரோடு ரயில்பெட்டி பராமரிப்பு தொழிற்கூடத்திற்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ்
கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்பு தொழிற்கூடத்திற்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ்
 பத்திரிக்கையாளர் சந்திப்பு
 திரு ஹரிசங்கர் வர்மா உரையாற்றுகிறார்
திரு. ஆர். குப்பன் அவர்கள் உரையாற்றுகிறார்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்பு தொழிற்கூடங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் வழங்கும் விழா இன்று (28.05.2016) ஈரோட்டில் உள்ள பயிற்சிப்பள்ளியில் இன்று நடைபெற்றது. தெற்கு ரயில்வே தலைமை இயந்திரவியல் பொறியாளர் திரு. ஆர். குப்பன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு இதற்கான சான்றிதழ்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர்  வர்மா  அவர்களிடம் வழங்கினார். 

தெற்கு ரயில்வே தலைமை இயந்திரவியல் பொறியாளர் திரு. ஆர். குப்பன் அவர்கள் விழாவில் பேசுகையில், ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் பெறுவதன் முக்கிய நோக்கம் ரயில் பயணிகளிடையே திருப்தி ஏற்படுத்துவதாகவே இருக்க வேண்டும் என்றும், இத் தரச் சான்றிதழ் பெறுவதால், தொடர்ந்து ரயில் பெட்டிகள் பராமரிப்பில் சிறந்த கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சொன்னதுடன், இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு சுகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அனைத்து தொழிற்கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஒருங்கிணைந்த தர மேலாண்மைச் சான்றிதழ் பெற முயற்சிகள் எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சொன்னார்.  ஒருங்கிணைந்த தர மேலாண்மைச் சான்றிதழில் தரக்கட்டுப்பாட்டு மேலாண்மை ஐஎஸ்ஓ 9001, சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு மேலாண்மை ஐஎஸ்ஓ 14001. மற்றும் ஊழியர் பணியிட உடல்நலக்கட்டுப்பாட்டு மேலாண்மை ஐஎஸ்ஓ 18001. ஆகியவை உள்ளடங்கியிருப்பதால், ரயில்பயணிகளிடையே ரயில்வே பற்றிய ஒரு சிறந்த நல்லுணர்வை ஏற்படுத்தும் என்று சொன்னார்.  இந்த சான்றிதழை பெற முயற்சிகள் மேற்கொண்ட சேலம் கோட்ட முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் திரு. ஆர் சரவணன் மற்றும் அவரது குழுவினரை பாராட்டினார். 

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா அவர்கள் பேசுகையில், கடந்த ஆறு மாதங்களாக சேலம் கோட்ட இயந்திரவியல் பிரிவு இந்த சான்றிதழ் பெற முயற்சிகள் எடுத்து வந்ததாகவும், மேலும் ஐஎஸ்ஓ 14001. மற்றும் ஐஎஸ்ஓ 18001 சான்றிதழ்கள் பெற முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஈரோட்டில் உள்ள டீசல் ரயில் எஞ்சின் பராமரிப்பு பணிமனை தொடங்கி 50 ஆண்டுகள் ஆகி உள்ளதாகவும், பொன் விழா ஆண்டில் டீசல் ரயில் எஞ்சின் பராமரிப்பு பணிமனை ஒருங்கிணைந்த தர மேலாண்மைச் சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொன்ன அவர், ரயில்வேயின் உள்ளேயும் மற்றும் வெளியிலிருந்தும் தரக்கண்காணிப்பு நிபுணர்கள் வந்து சோதனைகள் மேற்கொண்ட பின்னரே, இத்தரச் சான்றிதழ் வழங்கப்படுவதால், கடுமையான முறையில் தரம் பரிசோதிக்கப்படும் என்றும் சொன்னார். 

பின்னர் செய்தியாளர்களிடையே உரையாடுகையில், திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்றும், கோயம்புத்தூர் ரயில்நிலையத்திற்கு ஒருங்கிணைந்த தர மேலாண்மைச் சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொன்னார், மேலும், சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், கடைகளில் குத்தகைதாரர் பெயர், தொடர்பு எண், மற்றும் அந்த ரயில்நிலையத்தின் பொறுப்பில் உள்ள அதிகாரியின் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், பயணிகள் இந்த எண்களை தொடர்பு கொண்டு உடனடியாக தங்களது புகார்களுக்கு தீர்வு பெறமுடியும் என்றும் சொன்னார்.  மேலும், ரயில்நிலையங்களில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தட்டுகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத பாக்குமட்டை தட்டுக்களை உபயோகிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்திய ரயில்வே எங்கும் இத்தகு தட்டுகள் உபயோகப்படுத்த இது முன்மாதிரியாக அமைய வாய்ப்புள்ளது என்றும் சொன்னார்.  நெடுந்தொலைவு ரயில்களில் பயணிகள் தண்ணீர் இன்றி துயருறுவது பற்றி சொன்ன போது, காவேரி நதியில் நீர் வற்றியுள்ளதால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இதை சரி செய்ய ரயில்களுக்கு சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நீர் நிரப்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக ஈரோடு ரயில்நிலையத்தில் மின்தூக்கி மற்றும் மின்நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் சொன்னார்.  

பின்னர், நாடெங்கிலும் இந்திய ரயில்வேயால் அனுசரிக்கப்பட்டுவரும் ரயில்பயணிகள் வசதி மேம்பாட்டு வாரத்தின் மூன்றாவது நாள் சேவை தினமான இன்று, சங்ககிரி ரயில்நிலையத்தில் எர்ணாகுளம் பெங்களூரு நகரிடை விரைவு ரயிலில் பயணிகளிடம் குறைகேட்டறிந்தார்.  ரயிலின் மாற்றுத்திரனாளிகள் பெட்டியில் இதர பயணிகள் இருப்பதாக குறை தெரிவிக்கப்பட்டபோது, அவரது ஆணையின் பேரில் அத்தகு பயணிகள் இறக்கி விடப்பட்டு பொதுப்பெட்டிக்கு மாற்றப்பட்டார்கள்.  ரயில்நிலையத்தில் சில பயணிகள் குடிநீர் வசதி மற்றும் இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை  இல்லாமல் இருப்பது பற்றி சுட்டிக்காட்டிய போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் விரைவிலேயே நிறுவப்பட உள்ளதாக தெரிவித்த அவர், பகுதிப் பொறியாளரிடம் இரண்டாம் நடைமேடையில் கூரை மற்றும் இருக்கைகள் அமைக்க தேவையான மதிப்பீட்டினை சமர்ப்பிக்குமாறு ஆணை பிறப்பித்தார்.  

Thursday 26 May 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ரயில்வே சேவை வார விழாவின் ஒரு பகுதியாக இன்று (26.05.2016) தூய்மை தினம் அனுசரிப்பு

 கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலையம் முன்பு அமையவிருக்கும் வாகன நிறுத்தக வரைபடத்தை பார்வையிடுகிறார்
 கோட்ட மேலாளர் திரு வர்மா சேலம் ரயில் நிலையம் 5வது நடைமேடையை பார்வையிடுகிறார்
 கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலைய குளிர் வசதி காத்திருப்பு அறையை பார்வையிடுகிறார்
  கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலைய குளிர் வசதி காத்திருப்பு அறையில் பயணிகளிடம் கருத்துக் கேட்கிறார்

  கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலைய பயணிகள் தங்கும்  அறையை பார்வையிடுகிறார்
கோட்ட மேலாளர் சேலம் ரயில் நிலைய உணவகத்தின் சமையல் அறையை பார்வையிடுகிறார்

மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்களது வழி காட்டுதலின் படி, நாடங்கிலும் இந்திய ரயில்வேயால் அனுசரிக்கப்பட்டு வரும் பயணிகள் சேவை வாரத்தின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று (26.05.2016) தூய்மை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

சேலம் ரயில்நிலையத்தில், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு. மா.விக்னவேலு அவர்கள் தலைமையில் ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள், சாரணசாரணியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களுடன் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகள், நடைமேம்பாலங்கள், காத்திருக்கும் அறைகள் மற்றும் ரயில்பெட்டிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் சேலம் ரயில்நிலையத்தில் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு பயணிகளிடம் ரயில் வளாக தூய்மை குறித்து கருத்து கேட்டறிந்தார்.  பயணிகள் சேலம் ரயில் நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.  சேலம் வழியாக செல்லும் ரயில்களிலும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த்தற்கு, திரு. வர்மா, ஈரோடு ரயில்நிலையம் ரயில் சுத்தப்படுத்தும் நிலையமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், நீண்ட தூர ரயில்களின் தூய்மைப்பணி அங்கு மேற்கொள்ளப்படும் என்று பதிலளித்தார். 

நடைமேடைகளை சுத்தப்படுத்தும் பணிகளை அவர்  பார்வையிட்டபோது, ஊழியர்கள் சுத்தம் செய்யப்பட்ட குப்பைகளை ரயில்தடத்தில் கொட்டியதை கண்டு, குப்பைகளை அகற்ற தனியாக கூடை உபயோகப்படுத்தி குப்பைகளை மாநகராட்சி ஒதுக்கியுள்ள இடங்களிலே கொண்டு போய் கொட்டுமாறு அறிவுறுத்தினார்.  குளிரூட்டப்பட்ட தங்கும் அறையினை பார்வையிட்டு பயணிகளிடம் உரையாடிய போது, சில பயணிகள் அங்கு அதிக வெயில் நேரத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதை தெரிவித்தனர்.  உடனே அவர் சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு. விஜு வின் அவர்களிடம் அருகிலுள்ள காலி அறையை தயார் செய்து குளிரூட்டப்பட்ட தங்கும் அறையை  நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அறிவுறுத்தினார்.

சேலம் ரயில் நிலையம் முன்னால் அமையவுள்ள பயணிகளை இறக்கி விட்டுச் செல்லும் வழியை சற்றே அகலப்படுத்தி ஒரே நேரத்தில் 2 கார்களை நிறுத்த வசதி செய்யுமாறு அவர் பொறியாளர்களை கேட்டுக் கொண்டார்.  சேலம் ரயில்நிலைய 3வது நடைமேடையை அவர் ஆய்வு செய்யும் போது அங்கு சுத்தப்படுத்தும் பொருட்கள் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு சுகாதார ஆய்வாளருக்கு ஆணையிட்டார்.

பின்னர் அவர் சைவ மற்றும் அசைவ உணவகங்களையும், அங்குள்ள சமையலறைகளையும் பார்வையிட்டதுடன், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பயணிகளிடம் அங்குள்ள உணவின் தரம் மற்றும் சுத்தம் பற்றி கருத்து கேட்டார்.  பயணிகளும் அங்குள்ள உணவு பற்றி திருப்தி தெரிவித்தனர்.  உணவக மேலாளரிடம் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இயற்கைப் பொருள்களால் செய்யப்பட்ட உணவுத் தட்டுகளை உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.  


Wednesday 25 May 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2016 மே 25ம் தேதி முதல் ஜூன் முதல் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு “ரயில்வே சேவை வாரம்” அனுசரிப்பு

 
 

 











மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று இரண்டாண்டுகள் முழுமையடைந்த்தை முன்னிட்டு இந்திய ரயில்வே 2016 மே 26ம் தேதி முதல் ஜூன் முதல் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்குரயில்வே சேவை வாரமாகஅனுசரிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் அனைத்து ரயில்வே மண்டல மற்றும் கோட்டங்களில் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம், ரயில்களின் நேரந்தவறாமைக்கு கண்காணிப்பு, உணவுக்கூடங்கள் மற்றும் ரயில் பயணிகளிடைய பயணச்சீட்டு பரிசோதனைகள், பயணிகள் மற்றும் ரயில்களில் சரக்கு புக்கிங் செய்வோரிடையே குறைகேட்பு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் இதர ஊழியர்களுடன் இந் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.

ரயில் பயணிகள் சேவை வார நிகழ்ச்சி நிரல்:
1.       
முதல் நாள் : 26.05.2016 – தூய்மை விழிப்புணர்வு நாள்- அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தூய்மை அதிகாரிகள், ஊழியர்கள், சாரண சாரணியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுதல்

இரண்டாம் நாள் : 27.05.2016 : கனிவான சேவை நாள்  : ரயில்களில் பயணிகளுடன் தொடர்பு கொண்டு உணவு வழங்கல் மற்றும் இதர சேவைகள் குறித்து கருத்துக் கேட்டல்

மூன்றாம் நாள் : 28.05.2016 : சேவை நாள் : (தொடர்வு) பயணிகள் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து ஆய்வு

நான்காம் நாள் : 29.05.2016 விழிப்புணர்வு நாள்: ரயில்களின் நேரத்தில் இயக்குவது குறித்த கண்காணிப்பு, விரிவான பயணச்சீட்டு பரிசோதனை

ஐந்தாம் நாள் : 30.05.2016 : ஊழியர்  சேவை நாள் :  ரயில்வே குடியிருப்புகளை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பார்வையிட்டு அவர்கள் கருத்துக் கேட்பு, 1000 மரக்கன்றுகள் நடுதல், ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பங்கேற்கும் விளையாட்டு மற்றும் இதர நிகழ்ச்சிகள்

ஆறாம் நாள்31.05.2016 : ஒருங்கிணைப்பு நாள்சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களது கருத்துக் கேட்பு, ரயில் சரக்குப் போக்குவரத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள் குறித்து விளக்கி, மேலும் சரக்குகள் புக்கிங் செய்ய ஆர்டர் பெறுதல்

  ஏழாம் நாள் : 01.06.2016 : தகவல் பரிமாற்ற நாள் : கடந்த ஆறு நாட்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள், அவற்றின் பலன்கள் குறித்து பரிசீலனை மற்றும் பத்திரிக்கை மற்றும் இதர ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுக்குரயில்வே சேவைவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து விளக்குதல் 

Tuesday 24 May 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் ரயில்களில் கோடைகால ரயில்களில் குற்றங்களை குறைக்க சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடு

சிறப்பு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரயிலில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்

ரயில்களில் திருட்டு, கொள்ளை மற்றும் சக பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பது போன்ற குற்றங்களை குறைக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் விழிப்புணர்வு பிரச்சாரம், இரவு நேர ரயில்களில் கண்காணிப்பை அதிகரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோடைகால ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்  வேளையில் அதை  பயன்படுத்தி நடக்க வாய்ப்புள்ள குற்றங்களை தவிர்க்க தெற்கு ரயில்வே சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் திரு. எஸ்.சி. பாரி அவர்களுடன் ஆலோசித்து, சிறப்பு ரயில்வே பாதுகாப்புப் படைக்குழு ஒன்றை சேலம் கோட்டத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் திரு. பி. ராஜ்மோகன் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் இந்த சிறப்புக் குழுவில் 90 ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை வீர்ர்கள் இருப்பார்கள். அவர்கள் போத்தனூர் மற்றும் ஈரோட்டில்  தங்கி இருந்து, ஜோலார்பேட்டை-சேலம்-கோயம்புத்தூர், ஈரோடு-கரூர் மற்றும் சேலம்-நாமக்கல்-கரூர் தடங்களில் சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் வழியாக செல்லும் சுமார் 31 இரவு நேர ரயில்களில் சிறப்புக்கண்காணிப்பு மேற்கொள்வார்கள். இந்த தடங்களில் ஏப்ரல் 2016 வரை பதிவு பெற்றுள்ள 41 குற்றங்களில் ஜோலார்பேட்டை-சேலம்-கோயம்புத்தூர் மார்க்கத்தில் 11 குற்றங்கள் நடைபெற்றுள்ளதால், அந்த தடத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்.  இந்த ரயில்களில் சிறப்புக் கண்காணிப்பு குழுவினர் பயணித்து அனுமதி இன்றி பயணம் செய்வோர் மற்றும் சமூக விரோதிகளை கண்காணித்து நகை பறித்தல், பயணிகளின் உடைமைகளை திருடுதல் மற்றும் பெண் பயணிகளுக்கு தொல்லை கொடுத்தல் போன்ற குற்றங்களை நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள்.       

ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர்  தவிர, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பணியாற்றும் குற்றக் கண்காணிப்பு மற்றும் தடுப்புக் குழுவினரும், இரவு நேர ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில் பயணிகள் பயமன்றி வந்து போவதற்கு உதவும் பொருட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள்.  


சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரி சங்கர் வர்மா அவர்கள் ரயில் பயணிகள் இரவு நேர ரயில்களில் பயணிக்கும் போது விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லாமலும், ரயில்களின் கதவுகள் மற்றும் சன்னல்கள் அருகில் அமர்ந்து பயணம் செய்யாமலும் இருப்பதன் மூலமும் ரயில்வே நிர்வாகத்திற்கு குற்றங்களை தவிர்க்க உதவ இயலும் என்றும், அவர்கள் உடனடி காவல் உதவிக்கு கட்டணமற்ற தொலைபேசி எண்.182-யோ அல்லது ரயில்களில் பயணிக்கும் காவலர்களையோ அணுகுவதன் மூலமோ உடனடியாக உதவி பெற இயலும் என்றும் சொன்னார்.  

Friday 13 May 2016

தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக திரு பி. ஏ. தனஞ்சயன் பொறுப்பேற்பு


திரு  பி.ஏ. தனஞ்சயன் அவர்கள் இன்று (13.05.2016) தெற்கு  ரயில்வேயின்  தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக திரு. டி. லட்சுமணன் அவர்களிடமிருந்து  பொறுப்பேற்றுக்  கொண்டார்.   திரு.  லட்சுமணன் அவர்கள்  தெற்கு ரயில்வே தலைமை வணிகமேலாளர்  அவர்களது  சிறப்பு அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


திரு  பி.ஏ. தனஞ்சயன், அவர்கள் தெற்கு  ரயில்வேயின்  தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக  பொறுப்பேற்கு முன்னர் தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளராகப் பணியாற்றி வந்தார்.  இவர் மக்கள்தொடர்பு, விளம்பரம் மற்றும் சுற்றுலா, மற்றும் பத்திரிக்கைத் துறைகளில் முதுநிலைப் பட்டங்கள் பெற்றவர். தெற்கு ரயில்வேயில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.