Wednesday 30 November 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சேலம் விருத்தாசலம் தடத்தில் ரயில்தடத்தை அசுத்தப் படுத்துவோர் மீது நாளை (02.12.2016) முதல் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை



இன்று சேலம் விருத்தாசலம் தடத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா ஆய்வு செய்த போது, சேலம் டவுன் மின்னாம்பள்ளி ரயில்நிலையங்கள் அருகே ரயில்தடத்தை பொதுமக்கள் திறந்த வெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இந்திய ரயில்வே சட்டம் 1989ன் படி, ரயில்வேக்கு சொந்தமான (ரயில்தடங்கள் உட்பட) இடங்களை அசுத்தப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும், இந்தக் குற்றத்தை புரிவோர் மீது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

இவ்வாறு ரயில்தடங்களை அசுத்தப்படுத்துவது சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமன்றி, ரயில்தடங்கள் விரைவில் துருப்பிடித்து ரயில் இயக்கப் பாதுகாப்புக்கே சவாலாகவும் முடியும். அது மட்டுமன்றி, ரயில்தடங்களில் இவ்வாறு அசுத்தப்படுத்துவோர்  மீது ரயில் மோதி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.   பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டும், இவ்வாறு அசுத்தப்படுத்துவது தொடர்வது நடவடிக்கைக்குரியது.  


எனவே, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா நாளை (02.12.2016) முதல் அவ்வாறு அசுத்தப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்எனவே, பொதுமக்கள் ரயில்தடங்களை அசுத்தப்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செய்வோர் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 500 ரூபாய்கள் வரை அவர்களிடம் அபராதமாய் வசூலிக்கப்படுவதுடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புண்டு

Monday 28 November 2016

சேலம் விருத்தாசலம் வழியிலான ஈரோடு சென்னை எழும்பூர் பகல் நேர சிறப்பு விரைவு ரயில் 2016 டிசம்பர் 30 வரை நீட்டிப்பு


சேலம் விருத்தாசலம் வழியிலான ரயில் எண்.06028/06027 ஈரோடு சென்னை எழும்பூர் இடை பகல் நேர சிறப்பு விரைவு ரயில், பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட வேண்டுகோளை ஏற்றும்பயணிகள் பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டும், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் பரிந்துரைத்த படி, தெற்கு ரயில்வே இந்த ரயிலை 2016 டிசம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயில் வியாழன் மற்றும் சனி தவிர வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயிலின் பெட்டிகள் அமைப்பு, கால அட்டவணை மற்றும் நிறுத்தங்கள் முன்பு அறிவித்தபடியே இருக்கும். 


ரயில்வே நிர்வாகம், இந்த ரயிலை தொடர்ந்து இயக்கவோ, அல்லது வழக்கமான ரயிலாக மாற்றவோ முடிவெடுக்க உதவும் பொருட்டு, பயணிகள் இந்த சிறப்பு ரயில் நீட்டிப்பை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Tuesday 22 November 2016

ரயில் எண். 11063/11064 சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயில் பெட்டிகளின் வரிசையில் மாற்றம்



தற்போது, ரயில் எண். 11063/11064 சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலில்  பெட்டிகளின் வரிசையில் எஞ்சினுக்கு அடுத்தபடியாக எஸ்.9 பெட்டியும், அதன் பின்னர் S1 முதல் S8 வரை இருந்து வந்தது.  இதனால் பயணிகள் தங்களது இருக்கைகளை தேடி கண்டுபிடிப்பதில் பெரும் பிரச்சினையாக இருந்தது. இதனால், தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் திரு. அஜீத் சக்சேனா அவர்கள் மத்திய ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து பேசி, தற்போது அந்த அமைப்பை, எஞ்சினுக்கு அடுத்தபடியாக எஸ்.9 பெட்டியும், அதன் பின்னர் S8 முதல் S1 வரை இருக்கும்படியாக மாற்ற ஏற்பாடு செய்துள்ளார். அதன் படி, S9, S8, S7, S6, S5, S4, S3, S2 மற்றும் S1 என்ற வரிசையில் படுக்கை வசதி பெட்டிகளும், அதன் பின்னர் மற்ற பெட்டிகளும் வரும்.  20.11.2016 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. வழியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு இது குறித்து விபரமளித்து உதவுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.


முன்னர் இருந்த ரயில் பெட்டிகளின் வரிசை மற்றும் மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளின் வரிசை ஆகியவை இத்துடன்   மாதிரி வரைபடமாக தரப்பட்டுள்ளது. 

Friday 18 November 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து ரயில்நிலையங்களிலும் முழுமையான பயணச்சீட்டு பரிசோதனை



தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு 2016 நவம்பர் 20ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும், அனைத்து பயணிகள் ரயில்களிலும், முழுமையான பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. பயணிகள் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணம் செய்வதையும், தகுந்த நடைமேடைச்சீட்டு இல்லாமல் ரயில்நிலையங்களில் பிரவேசிப்பதையும் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  

02.02.2017 வரை நாகர்கோவில் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் தாமதம்



திருமங்கலம் விருதுநகர் இடையே ரயில்தடப் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாகர்கோவில் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் எண்.56319 02.02.2017 வரையில் 88 நாட்களுக்கு தாமதமாக திண்டுக்கல் வந்து சேரும் என்று மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. இதனால் மதியம் 2.25க்கு பதிலாக 3.25க்கு திண்டுக்கல் தாமதமாக வந்து சேரும் இந்த ரயில் இரவு 8.50க்கு பதிலாக 9.50க்கு கோயம்புத்தூர் வந்து சேரும். வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் இது போன்ற தாமதமாக வந்து செல்வதால், பயணிகள் தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் புதிய முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பொறுப்பேற்பு


திரு பெருமாள் நந்தலால்,  16.11.2016 அன்று சேலம் கோட்டத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.  இந்திய ரயில்வே பொறியியல் சேவையை சார்ந்த திரு நந்தலால் இந்திய ரயில்வேயில் 2007ம் ஆண்டு பணியில் சேர்ந்து தெற்கு ரயில்வேயில், உதவி கோட்டப் பொறியாளர், கோட்டப் பொறியாளர், மற்றும் முதுநிலை கோட்டப் பொறியாளராக சேலம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் பணியாற்றியுள்ளார்.  சிவில் எஞ்சினியரிங்கில் முதுநிலை (எம்.டெக்) பட்டம் பெற்றுள்ள திரு நந்தலால் சேலம் கோட்டத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமுன்னர் பாலக்காடு கோட்டத்தின் கிழக்குப் பகுதி முதுநிலை கோட்டப் பொறியாளராக பொறுப்பு வகித்தவர். அவருக்கு முன் சேலம் கோட்டத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளராக பதவி வகித்து வந்த திரு மா.விக்னவேலு அவர்கள், சொந்த வேண்டுகோளின் அடிப்படையில் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Wednesday 16 November 2016

ஈரோடு சென்னை எழும்பூர் பகல்நேர சிறப்பு ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு


சேலம் விருத்தாசலம் பகுதியில் உள்ள பயணிகளின் நீண்டநாள் வேண்டுகோளுக்கிணங்க அறிமுகம் செய்யப்பட்ட சேலம் வழியிலான ஈரோடு சென்னை எழும்பூர் பகல்நேர சிறப்பு ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சராசரியாக 20 சதவீத இருக்கைகள் மட்டுமே புக்கிங் செய்யப்பட்டு பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே உள்ளன. எனவே, ரயில் பயணிகள் இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே, இந்த ரயிலை தொடர்ந்து இயக்குவது பற்றியோ, அல்லது இதே ரயிலை வழக்கமான ரயில் சேவையாக மாற்றுவது குறித்தோ ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க இயலும். இல்லாவிட்டால், இந்த ரயில்சேவையை நிறுத்துவது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க நேரிடும். 

Monday 14 November 2016

போதனூர் பொள்ளாச்சி புதிய அகல ரயில் பாதை பணிகள் நடை பெற்று வரும் இடத்தில் பொதுமக்கள் அருகில் செல்லாமல் இருக்க வேண்டுகோள்




போதனூர் பொள்ளாச்சி தடத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. இதற்காக ரயில் தட இயந்திரங்கள், சரளை கற்கள் மற்றும் ரயில் தடங்களை ஏற்றி வரும் ரயில்கள் மற்றும் லாரிகள் இயக்கம் பெரும் எண்ணிக்கையில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த இடங்களில் பொதுமக்கள் நடமாடுவதும் ரயில் தடங்களை அனுமதியற்ற இடங்களில் கடப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தகு நடமாட்டம் அவர்களுக்கு காயம் மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய வாய்ப்பு உள்ளதால் தடப்பணி நடைபெறும் இடங்களில் தடத்தின் அருகில் செல்லாமல் இருக்கும் படியும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் ரயில் தடத்தை கடக்காமல் தவிர்க்கும் படியும் இதன் மூலம் கேட்டுக் கொள்ள படுகிறது.

Wednesday 9 November 2016

முள்ளுவாடி லெவல்கிராசிங் கேட் வழியாக பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி





Warning Boards placed near the Mulluvadi LC Gate

இன்று சில ஊடகங்களில் முள்ளுவாடி லெவல்கிராசிங் கேட் வழியாக கார், கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கடந்து செல்ல சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இது தவறான தகவல் ஆகும்.

அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் போக்குவரத்து காவல் அதிகாரிகள் கேட்டுக் கொண்ட படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல அனுமதித்துள்ளார்.  இது குறித்து லெவல்சிராசிங் கேட்டின் இருபுறமும் எச்சரிக்கைப் பலகைகளும் ரயில்வே நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ளன.


எனவே, முள்ளுவாடி லெவல்கிராசிங் கேட் வழியாக பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால், இதர வாகனங்கள் அந்த வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது என்பதும், அதை மீறி அவ்வழியாக செல்ல முயலும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வாறு செல்பவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  

Tuesday 8 November 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் மேம்பட்ட செயல்பாட்டுடன் தனது 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது




தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் 9 ஆண்டுகளுக்கு முன்பு 1.11.2007 அன்று துவக்கப்பட்டு தற்போது 10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக செயல் பட்டு ரயில் பயணிகள் மற்றும் இதர ரயில் உபயோகிப்பாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

2015 நவம்பர் முதல் 2016 அக்டோபர் வரையிலான ஓராண்டு காலத்தில் சேலம் கோட்டத்தின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பீட்டுடன் கீழே தரப்பட்டுள்ளது.


தொகை லட்ச ரூபாய்களில்
தொகை லட்ச ரூபாய்களில்
வருவாய் (நவம்பர் முதல் அக்டோபர் வரை)
2015-16
2014-15
ஏடிஎம்
54.69
61.35
உணவகங்கள்
3,07.88
3,08.29
சரக்கு போக்குவரத்து
54,43
61,28
மொத்த வருவாய்
620,18
610,07
சரக்கு மொத்தம் மெட்ரிக் டன்களில்
7,74.02
7,46.72
சேலம் கோட்டத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் எண்ணிக்கை (லட்சங்களில்)
3,61.32
3,74.77
இதர பயணச்சீட்டு வருவாய்
44,37
37,77
பார்சல்
19,78.19
21,90.5
வண்டி நிறுத்துமிடம் பார்க்கிங்
3,03.66
3,32.3
விளம்பர வருவாய்
3,43.31
5,43.11
தங்கும் அறைகள் வருவாய்
54.18
44.84
இதர சில்லறை வருவாய்கள்
23,54
31,84
பயணச் சீட்டு பரிசோதனை மூலம் வருவாய்
5,53.94
4,75.69
நிகர வருவாய்
1287,67.19
1270,91.57
  
 ஏடிஎம், உணவகம், சரக்கு போக்குவரத்து, பார்சல், நிறுத்தக வருவாய் போன்ற வருவாய்கள் அனைத்து இந்திய ரயில்வேயிலும் உள்ளது போலவே குறைவாக வருமானம் வந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் பயணிகள் வசதி மேம்பாட்டிற்காக தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் பல்வேறு ரயில்நிலையங்களில் கீழ்க்கண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன:

சேலம் ரயில்நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டுகள்

கரூர் ரயில்நிலையத்தில் புதிய பயணிகள் தங்கும் அறைகள்

சேலம் மற்றும் கோயம்புத்தூரில் குளிர்வசதி செய்யப்பட்ட புதிய பயணிகள் காத்திருப்பு அறைகள்

சேலம் ரயில்நிலையம் அருகில் பல்நோக்கு வணிக வளாகம்

திருப்பூர் அருகே விஜயமங்கலம் மற்றும் தொட்டிப்பாளையம் ரயில்நிலைய புதிய கட்டிடங்கள்  

ஈரோடு சென்னை எழும்பூர் இடையிலான பகல் நேர விரைவு ரயில்கள் உள்பட பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கம்

 தற்போது கீழ்க்கண்டவாறு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.

சேலம் ரயில்நிலையத்திற்கான இரண்டாவது நுழைவு வாயிலுக்கான ஆயத்தப் பணிகள் துவக்கப்பட்டு நடைமேம்பாலத்தை விரிவு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் புதிய நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள்,  ஈரோடு ரயில் நிலையத்தில் மின்தூக்கிகள் அமைக்கும் பணி

கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் பல்லடுக்கு வாகனம் நிறுத்தும் வசதிக்கான திட்டப்பணிகள்

மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தின் நடைமேடைகளை 24 ரயில்பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் தடத்தில் உள்ள துடியலூரில் தமிழக அரசின் நிதிப்பங்களிப்புடன் புதிய ரயில்நிலைய கட்டிடம், மற்றும் பெரியநாயக்கன் பாளையத்தில் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் புதிய ரயில் நிலைய கட்டிடம் அமைக்கம் பணிகள்


சின்ன சேலம் கள்ளக்குறிச்சி இடையே தமிழக அரசின் நிதிப்பங்களிப்புடன் புதிய அகல ரயில் பாதை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

Wednesday 2 November 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

திரு சந்திரபால் அவர்கள் கண்காணிப்பு உறுதிமொழியை வாசிக்கிறார்
 ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்
 திரு சந்திரமௌலி அவர்கள் உரையாற்றுகிறார்
விழாவில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதி

நாடெங்கிலும் 31.10.2016 முதல் 05.11.2016 வரை பொது வாழ்வில் தூய்மை மற்றும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தி, இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, அனுசரிக்கப்பட்டு வரும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக இன்று (02.11.2016) தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஊழியர்களிடையே விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சேலம் தமிழக அரசு காவல் துறை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் திரு. சந்திரமௌலி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கிய அவர், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள் எவ்வாறு கண்காணிக்ப்பட்டு பிடிக்கப்படுகிறார்கள் என்பதையும் விளக்கினார். மேலும், ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட பணம் முதலில் தற்காலிக மகிழ்ச்சி தந்தாலும், பின்னால் அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் துன்பம் உண்டாக்கும் என்று சொன்னார்.

ஏற்காடு மான்ட்போர்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு கே.ஜே. ஜார்ஜ் அவர்கள் பேசுகையில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதில் மட்டுமன்றி, தங்களது அன்றாட பணிகளையும் ஊழல் கறை இன்றி தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று சொன்னார்.  தெற்கு ரயில்வே தலைமையக துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி திருமதி காயத்ரி அவர்களும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

முன்னதாக, சேலம் ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் திரு சந்திரபால் அவர்கள் ஊழியர்களுக்கு கண்காணிப்பு உறுதிமொழி செய்து வைத்தார்.  சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் திரு பிரபாகரன் அவர்கள் வந்தவர்களை வரவேற்றார்.  சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜுவின் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  

Tuesday 1 November 2016

இந்திய ரயில்வேயில் முதன் முறையாக கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இன்று (01.11.2016) அனைத்து மகளிர் வசதி மையம் திறப்பு






தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் துவக்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் அருகே, அனைத்து மகளிர் உதவி மையம் இன்று (01.11.2016)  திறக்கப்பட்டுள்ளது. இது போன்று இந்திய ரயில்வேயில் முதன் முறையாக தெற்கு ரயில்வேயில் 7 ரயில் நிலையங்களில் மகளிர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அனைத்து மகளிர் உதவி மையத்தில் பெண் பயணிகளுக்கு தேவையான ரயில் பயணம் சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளும் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு பெண் ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர்களால் வழங்கப்படும். மேலும், பெண் பயணிகள் முன்னர் பணம் செலுத்தி பயணம் செய்யும் ஆட்டோ வசதி மற்றும் அரசு ரயில்வே போலீசாரிடம் ஏதாவது புகார்செய்ய விரும்பினால் அதற்கான வசதி ஆகியவைவும் செய்து தரப்படும். மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்ட விரும்பும் தாய்மார்களின் வசதிக்காக தனியாக பாலூட்டும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது.


தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் இது போன்ற அனைத்து மகளிர் உதவி மையங்கள் விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.