Tuesday 26 April 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் புதிய கோட்ட மேலாளர் இன்று பொறுப்பேற்பு

திரு. ஹரி சங்கர் வர்மா,  சேலம் கோட்டத்தின் புதிய ரயில்வே கோட்ட மேலாளர்
 திரு. ஹரி சங்கர் வர்மா,  சேலம் கோட்டத்தின் புதிய ரயில்வே கோட்ட மேலாளர்
திரு. ஹரி சங்கர் வர்மா,  சேலம் கோட்டத்தின் புதிய ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்ற பின்னர் முந்தைய கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்களுடன் கைகுலுக்குகிறார். 

திரு. ஹரி சங்கர் வர்மா, இன்று (26.04.2016) தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இவர் அப் பொறுப்பேற்கும் 5வது கோட்ட மேலாளராவார்.  இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையை சேர்ந்த திரு. வர்மா இந்திய ரயில்வேயில் 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.  மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேயில் திரு.வர்மா பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.  அவரது பணிக்காலத்தில் பெரும் பகுதி போபால் கோட்டத்தில் இயக்க மேலாளர் மற்றும் முதுநிலை இயக்க மேலாளர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். 

அங்கே பணியாற்றிய காலத்தில் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம், போபால் ரயில்வே கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஹபீப்கஞ்ச் நிசாமுத்தீன் விரைவு ரயில்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற முக்கிய காரணமாக விளங்கியதுடன், புசாவல் நகரில் உள்ள ரயில்வே மண்டல  பயிற்சிப் பள்ளியின் முதல்வராக பணியாற்றிய போது அப்பள்ளி இந்திய ரயில்வேயிலேயே முதல்முறையாக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற பள்ளியாக காரணமாக இருந்தார். 

மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டத்தில் கூடுதல் கோட்ட மேலாளராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியுள்ள திரு.வர்மா, மும்பை புறநகர் ரயில்சேவைகளில் காலந்தவறாமையை பெருமளவில் முன்னேற்ற உதவினார்.  மத்திய ரயில்வேயின் தலைமை வணிக மேலாளராக அவர் பணியாற்றிய போது நாக்பூரில் இந்திய ரயில்வேயில் முதன் முறையாக தனியார் சரக்கு முனையம் அமைக்க முக்கிய காரணமாக இருந்தார். 


சேலம் கோட்டத்தின் கோட்ட மேலாளராக பொறுப்பேற்பதற்கு முன்னர் மத்திய ரயில்வேயின் தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளராக பணியாற்றிய போது, திரு. வர்மா அவர்கள் மேற்பார்வையில் தினசரி பயணிகள் ரயில்களில் கூடுதலாக நிரந்தர அடிப்படையில் 238 ரயில்பெட்டிகள் இணைக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் நெடுந்தூர ரயில்கள் இயக்கி அதிக பயணிகள் பயணம் செய்ய உறுதுணையாக இருந்தார். 

இவர் பல்வேறு பணி மற்றும் பயிற்சி நிமித்தமாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சில அயல்நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.  திரு வர்மா அவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாட்டில் பெரும் ஆர்வம் உடையவர்.  

Monday 18 April 2016

நாட்டின் கடுமையான பொருளாதாரச் சூழலிலும் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறப்பாக பணியாற்றியுள்ளது – தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் 2016ம் ஆண்டு ரயில்வே வார விழாவில் உரை


சிறப்பாக பராமரிக்கப்பட்ட பெரிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை திரு.சுப்ரான்சு சேலம் ரயில் நிலைய மேலாளர் திரு.முருகேசனிடம் வழங்குகிறார். அருகில் திரு. ஆர்.எஸ்.சின்ஹா
சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை திரு.சுப்ரான்சு மோகனூர் ரயில் நிலைய மேலாளர் திரு.விஜயகுமாரிடம் வழங்குகிறார். அருகில் திரு. ஆர்.எஸ்.சின்ஹா
 திரு சுப்ரான்சு விழாவில் உரையாற்றுகிறார்
 அலங்கரிக்கப்பட்ட விழா மேடை
விழாவில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதி

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இன்று (18.04.2016) 61வது ரயில்வே வார விழா சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. 1853ம் ஆண்டில் இந்தியாவில் ரயில் சேவை முதன் முறையாக துவங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இவ்விழா நாடெங்கிலும் இந்திய ரயில்வேயால் கொண்டாடப்படுகிறது.

விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்ட ரயில்நிலையங்கள் மற்றும் பாதுகாப்பான ரயில் தடப்பகுதி போன்றவற்றிற்காக 14 சுழற்கேடயங்களை சம்பந்தப்பட்ட ரயில்நிலைய மேலாளர்களுக்கு வழங்கினார். சிறப்பாக பராமரிக்கப்பட்ட பெரிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை சேலம் ரயில் நிலைய மேலாளர் திரு. முருகேசன் அவர்களும், சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறிய ரயில்நிலையத்திற்கான கேடயத்தை மோகனூர் ரயில் நிலைய மேலாளர் திரு. விஜயகுமார் அவர்களும். திரு சுப்ரான்சு அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.  இது தவிர 4 அதிகாரிகள் உள்பட 240 சேலம் கோட்ட ஊழியர்களுக்கு திரு. சுப்ரான்சு அவர்கள் கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி ஜோத்சனா பிரசாத் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

விழாவில் பேசுகையில் திரு. சுப்ரான்சுசு சேலம் கோட்டம் கடந்த நிதியாண்டில், நாடெங்கிலும் கடுமையான நிதிச்சூழலிலும் சிறப்பாக பணியாற்றி மேம்பாடு கண்டிருப்பதாக தெரிவித்தார்.  பயணிகள் வருவாய் ரூ.459 கோடியில் இருந்து ரூ.477 கோடியாக 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பயணச்சீட்டு சோதன வருவாய் ரூ.4.49 கோடியில் இருந்து ரூ.4.96 கோடியாக 10.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதர வருவாய் ரூ.36.3 கோடியில் இருந்து ரூ.40.3 கோடியாக 11.04 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், விளம்பர வருவாய் ரூ.4.63 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாக 24 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், உணவக வருவாய் ரூ.2.08 கோடியில் இருந்து ரூ.2.78 கோடியாக 34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், வாகன நிறுத்துமிட வருவாய் ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.68 கோடியாக 21 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அவர் சொன்னார்.

ரயில்களின் நேரந்தவறாமை, 93.5 சதவீதத்தில் இருந்து 95 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், கடும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகள் ரூ.990  கோடியில் இருந்து ரூ.890 கோடியாக அதாவது 10  சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவிம் சொன்னார். 

பயணிகள் வசதி மேம்பாட்டிற்காக, சேலம் ரயில் நிலையக் கட்டிடம் விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கு கோயம்புத்தூர், விஜயமங்கலம், மற்றும் தொட்டிப்பாளையம் ரயில் நிலைய புதிய கட்டிடங்கள், திருப்பூரில் புதிய பயணிகள் காத்திருப்பு அறை, கரூரில் புதிய பயணிகள் தங்கும் அறை, ஈரோடு ரயில் நிலையம் முன்பு அழகிய தோட்டம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில்  கட்டண அடிப்படையிலான குளிர்வசதி செய்யப்பட்ட தங்கும் அறைகள், ஸ்மார்ட் கார்டு மூலம் இயங்கும் 15 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள், 6 நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு மூலம் இயங்கும் 15 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை சேலம் கோட்டம் செய்திருப்பதாக சொன்னார். 

மேலும், இம்மாத இறுதிக்குள் சேலம் ரயில் நிலையத்தில் 2 நகரும் மின்படிக்கட்டுகள் (escalators) நிறுவப்பட்டு விடும் என்றும், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ரயில்நிலையங்களிலும் அவை நிறுவப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.   தெற்கு ரயில்வேயிலேயே முதன் முறையாக ஈரோட்டில் தனியார் மூலம் இயங்கும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் நிறுவப்பட்டுள்ளதாக சொன்ன அவர், பெரியநாயக்கன் பாளையம் ரயில்நிலைய கட்டிடம் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் நவீன முறையில் கட்டப்பட உள்ளதாகவும், விரைவில் 6 முக்கிய ரயில்நிலையங்களில் 40 குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகவும் சொன்னார். 

பயணிகள் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் தொலைபேசி, டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், ஈமெயில் மற்றும் புகார் இணையதளம் மூலமாக பெறப்பட்டு சரிசெய்யப்படுவதை பயணிகள் பெருமளவில் பாராட்டியுள்ளதாக தெரிவித்தார்.  பயணிகள் ஒத்துழைப்பினாலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாலும், தேசீய அளவில் சுத்தமாக பராமரிக்கப்பட்ட ஏ பிரிவு ரயில்நிலையங்கள் பட்டியலில், சேலம், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் முதல் 20 ரயில் நிலையங்களுக்குள் இடம் பெற்றிருப்பதாகவும், அதில் சேலம் 7வது சுத்தமான ரயில் நிலையமாக தேர்வு பெற்றிருப்பதாகவும், ஏ1 பிரிவு ரயில் நிலையங்களில் கோயம்புத்தூர் ரயில்நிலையம் இந்தியாவிலேயே 13 வது சுத்தமான ரயில்நிலையமாக தேர்வு பெற்றிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

பாதுகாப்பை பொறுத்த வரையில் கடந்த ஆண்டில் 5 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், 10 லெவல் கிராசிங்குகள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அது கிடைத்தவுடன் அவை மூடப்பட்டு விடும் என்றும், மேலும் 20 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் விரைவில் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

ஊழியர் நலனைப் பொறுத்தவரையில், சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டில் 1345 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பதாகவும், இது 2014ம் ஆண்டின் எண்ணிக்கையான 627 ஐ விட 114 சதவீதம் அதிகம் என்றும், 9000 சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் ஸ்கேனிங் செய்யப்பட்டு அவை அவர்கள் பணி ஓய்வு பெறும் போது குறுந்தகட்டில் (CD) பதிக்கப்பட்டு பாதுகாப்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஈரோட்டில் ரூ 5.5 கோடி செலவில் கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ரயில்வே மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளை விட தரமாக இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளதாக தெரிவித்த திரு. சுப்ரான்சு இது வரை பாலக்காடு கோட்டத்தில் இது வரை இயங்கி வந்த ஊழியர்கள் கணினி பணிப்பதிவேடுகள் தற்போது முழுமையாக சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில் உள்ள கணினிக்கு மாற்றப்பட்டு விட்டதால், இனி சேலம் கோட்ட ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணிப் பதிவுகள் சேலம் கோட்டத்திலேயே பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

தெற்கு ரயில்வே தலைமையக ரயில்வே வார விழாவில் சேலம் கோட்டம் பணியாளர் பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்கான சுழற்கேடயம் மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்ட செயல்பாட்டிற்கான சுழற்கேடயம் இரண்டையும் பெற சிறப்பாக பணியாற்றிய சேலம் கோட்ட பணியாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர் பாராட்டினார்.

விழாவில் சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.  வந்திருந்தோரை மகிழ்விக்க ஊழியர்களின் கலை நிகழ்ச்சிசகள் நடைபெற்றன. முன்னதாக சேலம் கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் திரு. சின்ஹா அவர்கள் வந்திருந்தோரை வரவேற்றார். சேலம் கோட்ட  பணியாளர் நல அலுவலர் திரு. ஜி ஜனார்த்தனன் நன்றியுரை வழங்கினார்.  

Tuesday 12 April 2016

ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நடவடிக்கை

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பறை

ரயில் நிலையங்களில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை சுத்தமாக பராமரிக்கவும், ரயில் பயணிகள் உபயோகிக்க உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்ய தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் மருத்துவம், பொறியியல் மற்றும் வணிகவியல் பிரிவு அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் 2016 ஏப்ரல் 20ம் தேதி வரை சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கழிப்பிடங்களை நேரில் ஆய்வு செய்வார்கள்.  பொதுமக்கள் சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களின் கழிப்பிடங்கள் குறித்து ஏதாவது புகார் செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சேலம் கோட்டம் : 0427-2431010

இது தவிர, தெற்கு ரயில்வேயின் அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் குறித்து புகார் தெரிவிக்க விரும்பினால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வணிகவியல் துறை கட்டுப்பாட்டு அறை:
90031 60995

தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளரின் சிறப்பு அலுவலர்:
044-25354405

Saturday 2 April 2016

கோயம்புத்தூர் அருகில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ரயில்நிலைய புதிய கட்டிடம் கட்ட வேலைகள் துவக்கம்

 திரு சுப்ரான்சு கல்வெட்டை திறந்து வைக்கிறார் அருகில் இடப்புறம் திரு ஆர். ராஜேந்திரன், திரு ஆர்.எஸ் சின்ஹா
புதிய கட்டிட கல்வெட்டு
 கட்டப்படவிருக்கும் ரயில்நிலையத்தின் மாதிரி வடிவம்
 தற்போதுள்ள ரயில் நிலையம் 
கட்டட வரைபடம்
 கட்டப்படவிருக்கும் புதிய கட்டிடத்தின் முகப்புத் தோற்றம் 
விழாவில் பேசும் பயணிகள் நல சங்க உறுப்பினர்

153 வருடங்கள் பழமையான பெரியநாயக்கன்பாளையம் ரயில்நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று (02.04.2016) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டை திரு சுப்ரான்சு அவர்கள் கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் வர்க்ஸ் நிறுவன இயக்குநர், திரு ஆர் ராஜேந்திரன், சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு ஆர் எஸ் சின்ஹா, சேலம் கோட்டப் பொறியாளர் திரு நந்தகோபால், மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.  

வடகோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ரயில் தடத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ரயில்நிலையம் இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றானது. 1873ம் ஆண்டு நிறுவப்பட்டது. பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு இந்த ரயில் நிலையத்தை ரூ 75 லட்சம் செலவில் புதுப்பித்துக் கட்ட கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் வர்க்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இப்பணிகளை துவக்கி வைக்கும் முகமாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அதற்கான கல்வெட்டை இன்று திறந்து வைத்தார்.

நிகழ்வில் பேசுகையில், திரு. சுப்ரான்சு அவர்கள், கட்ட்டப்பணிகள் 8 மாத காலத்தில் முடிக்கப்படும் என்றும், இப்பணிகளை மேற்கொள்ள செலவுகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தமைக்கு கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் வர்க்ஸ் நிறுவன நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.  அருகிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகாநந்தா பல்கலைக் கழகத்தில் பயில்வோர், மற்றும் லட்சுமி மெஷின் வர்க்ஸ் நிறுவன ஊழியர்கள் மட்டுமன்றி இப்பகுதி பொதுமக்களின் பயணத்தை இனிமையாக்க இம் மேம்பாட்டுப் பணிகள் உதவும் என்று தெரிவித்த அவர், இப்பகுதியின் தொழில் மேம்பாட்டுக்கும் அது உதவும் என்று சொன்னார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், வடகோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ரயில் தடத்தினை இரட்டிப்பாக்கும் திட்டம் ஏதும் தற்போது இல்லை என்றும், தற்போதுள்ள ரயில்சேவைகள் பயணிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து வருவதாகவும் சொன்ன அவர், நீலகிரி மலை ரயில் பகுதியில் பாதுகாப்பு கருதி சிறப்பு ரயில்கள் இயக்க இயலாது என்றும், அதற்கு பதிலாக தற்போதுள்ள ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி சோதனை அடிப்படையில் இணைக்கப்பட்டு உள்ளதாக சொன்னார்.  துடியலூர் ரயில் நிலைய கட்டிடம் கட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி அதற்கான தொகையை செலுத்தி உள்ளதாகவும், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு 2 வாரங்களுக்குள் பணிகள் துவங்கும் என்றும் சொன்னார். 


கோயம்புத்தூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதி ரயில்பயணிகள் நல அமைப்பின் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பயணிகள் வசதி மேம்பாட்டிற்கு சேலம் கோட்டம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். விழாயில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு கேபி தாமோதரன், முதுநிலைய இயக்க மேலாளர் திரு ஈ ஹரிகிருஷ்ணன், முதுநிலை மின்பொறியாளர் திரு எஸ் ரெங்கராஜன் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.