Tuesday 28 March 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி கொடியசைத்து துவக்கிவைக்கப்பட்டது


 



மின்சாரம் தாக்கி ஏற்படுகிற விபத்துகளை தவிர்க்கவும், ரயில்வே மின்அமைப்புகளின் அருகில் செல்வதில் உள்ள அபாயத்தை விளக்கியும், சேலம் கோட்ட மின்பிரிவு 28.03.2017 முதல் 31.03.2017 வரை மேற்கொள்ள உள்ள மின்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (28.03.2017)   சேலம் கோட்ட அலுவலகத்தில் இருந்து மின்பாதுகாப்பு பிரச்சார ஊர்தியை (பாதுகாப்பு ரதம்) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை மின் பொறியாளர் திரு. எம். பிரபாகரன், இதர துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பின்னர் ரயில்வே கோட்ட மேலாளர் பிரச்சார பிரசுரங்களை வெளியிட்டார்.  இப்பிரச்சார ஊர்தி மூலம் சுமார் 1,00,000 பேரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 10,000 துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 2500 கேலண்டர்களை விநியோகிக்கவும், பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய 1000 ஜியோமெட்ரி பாக்ஸ்களை பள்ளிக்குழந்தைகளுக்கு விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் எச்சரிக்கைகளையும் தாண்டி, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் ரயில்வே வளாகங்களில் உள்ள 25000 வோல்ட் மின்சக்தி அமைப்புகளின் அருகில் செல்வதால் விபத்துக்கு உள்ளாகி வருவது தொடர்கிறது. பல நேரங்களில் உயிரிழப்பும். னர்.

நிகழ்ச்சியில் பேசுகையில் திரு ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் வருமுன் காக்கும் கொள்கையை நம்புவதாகவும், ரயில்வே மற்றும் சாலை உபயோகிப்பாளர்களை சந்தித்து பாதுகாப்பாக அவற்றை உபயோகிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதனால் பல்வேறு உயிர் மற்றும் பொருள் சேதத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சொன்னார்.  அத்துடன், 2017ம் ஆண்டில் 2017ம் ஆண்டில், சேலம் மார்க்கெட் ரயில்நிலையம் மற்றும் மேட்டூர் அணை ரயில்நிலையங்களில் இரு மின்விபத்துக்களில் இருவர் சிக்கி மின்அதிர்ச்சிக்கு ஆளாகி உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை தந்ததாகவும் சொன்னார். குழந்தைகளுக்கு பள்ளிகளில் அறநெறிக் கல்வியுடன் இத்தகு பாதுகாப்பு பற்றிய கல்வியும் தரப்பட்டால், அவர்களது வருங்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் என்றும், இத்தகு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் கோட்ட மின்பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார். 

Wednesday 22 March 2017

23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையை 23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம் திரு கே.ஏ. மனோஹரன் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார். இணை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திரு. ஈ. ஸ்ரீனிவாஸ், தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவு தலைமை நிர்வாக அலுவலர் திரு. எல். சுதாகர ராவ், தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவு தலைமைப் பொறியாளர் திரு. பிரபுல்ல வர்மா, தெற்கு ரயில்வே தலைமை சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பொறியாளர் திரு. எல். இளவரசன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா, பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் திரு நரேஷ் லால்வானி, போத்தனூர் கட்டுமானப் பிரிவு இணைத் தலைமைப் பொறியாளர் திரு. ஆர், ராமகிருஷ்ணன், ஆகியோருடன், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம், சேலம் கோட்டம், மற்றும் பாலக்காடு கோட்ட அதிகாரிகள், ஆய்வின் போது, அவருடன் பங்கேற்கிறார்கள்.

23.03.2017 அன்று காலை சுமார் 10.30 மணி முதல் மதியம் 3.00 மணிக்குள் பொள்ளாச்சி கிணத்துக்கடவு இடையேயும், 24.03.2017 அன்று காலை சுமார் 10.30 மணி முதல் மதியம் 2.00 மணிக்குள் கிணத்துக்கடவு பொள்ளாச்சி  இடையேயும் மோட்டார் டிராலி மூலம் தடத்தை அவர் ஆய்வு செய்வதுடன், 24.03.2017 அன்று மதியம் சுமார் 03.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் போத்தனூர்  பொள்ளாச்சி  இடையேயும் டீசல் எஞ்சின் மற்றும் ரயில்பெட்டிகள் மூலம் இத் தடத்தில்  அவர் வேகப்பரிசோதனை செய்ய உள்ளார். எனவே இக்குறிப்பிட்ட நேரங்களில் பொது மக்கள் ரயில்தடம் அருகே செல்லாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொள்ளாச்சி போத்தனூர் இடையிலான சுமார் 40 கிமீ தொலைவு கொண்ட பழைய மீட்டர் கேஜ் ரயில்பாதை தற்போது சுமார் 340 கோடி ரூபாய் செலவில் அகலப்பாதையாக 2010ல் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடுமையான பாறைகள் நிறைந்த மலைப்பாதையில் சுமார் 4 கிமீ தூரத்திற்கு கடினமான சூழலில் ரயில்தடம் போடப்பட்டுள்ளது. இத்தடத்தில் தரைமேம்பாலம், மற்றும் தரைக்கீழ்ப்பாலம் உள்பட மொத்தம் 110 ரயில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் முன்பு இருந்த 37 லெவல் கிராசிங் கேட்டுகளில் பெரும்பலானவை மூடப்பட்டு தற்போது 14 லெவல் கிராசிங்குகள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் இன்னும் மூன்று மாதகாலத்திற்குள் மேலும் 4 லெவல் கிராசிங்குகளை மூட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் புதிய அகல ரயில் பாதையால் கோயம்புத்தூர், இதர தெற்கு நகரங்களான பழனி, மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டு இந்த இடங்களுக்கு செல்லும் பயண நேரம் பெருமளவில் குறைக்கப்பட வழி வகுக்கப்பட்டுள்ளது.

Wednesday 1 March 2017

சேலம் கோட்ட ரயில்களில் உயிரிக்கழிவறைகள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

சேலம் கோட்ட ரயில்களில் உயிரிக்கழிவறைகள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

பசுமை ரயில் தடங்களை நாடெங்கிலும் உருவாக்கும் ரயில்வே அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்புக்கூடத்தில் தற்போது முதன்மைப் பராமரிப்பில் உள்ள சேரன்/நவஜீவன் விரைவு ரயில், கோயம்புத்தூர் சென்னை நகரிடை இன்டர்சிட்டி ரயில், கோயம்புத்தூர் மன்னார்குடி செம்மொழி விரைவு ரயில், கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயில், கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு ரயில் போன்ற பல ரயில்களில் தற்போதுள்ள கழிவறைகளை மாற்றி உயிரிக் கழிவறைகளாக அதாவது பயோடாய்லட்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. மொத்தம் 35 ரயில்பெட்டிகளில் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக, புனேயில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து 2 கட்டங்களாக அதாவது 30/12/2016 அன்றும் 12.02.2017 அன்றும், (35 ரயில்பெட்டிகளுக்கு பெட்டிக்கு 4 பயோ கழிவறைகள் வீதம்) 140 பயோ கழிவறைகள் ரயில்வே வாரியத்தில் இருந்து சேலம் கோட்ட கோவை ரயில்பெட்டி பணிமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளன.

ஒரு ரயில்பெட்டியில் தற்போதுள்ள 4 கழிவறைகளையும் மாற்றி அவற்றில் பயோடாய்லட் பொருத்துவதற்கு குறைந்த பட்சம் 2 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுவதால், இயக்கத்தில் உள்ள ரயில்பெட்டிகளை நிறுத்தி அவற்றில் இப்பணிகளை மேற்கொள்ள இயலாது. எனவே, உதிரியாக அதாவது spare என்று சொல்லப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே ஒன்றன் பின் ஒன்றாக இவற்றை பொருத்த முடியும். இதுவரை 15 ரயில்பெட்டிகளில் இவை பொருத்தப்பட்டுள்ளன. மார்ச் 25க்குள் இவை அனைத்தும் மீதமுள்ள ரயில்பெட்டிகளிலும் பொருத்தி முடிக்கப்பட்டு விடும்.

ஒரு ரயில்பெட்டியில் 4 உயிரிக்கழிவறைகள் பொருத்த அனைத்து செலவுகளும் உட்பட சுமார் 4,13,000 ரூபாய்கள் செலவாகும்.