Tuesday 29 March 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அகில இந்திய அளவில் சுத்தமாக பராமரிக்கப்படும் ரயில் நிலையங்களில் முதன்மை இடங்கள் பெற்று சாதனை

2015 மற்றும் 2016க்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்கள் அறிவித்திருந்த படி மாண்புமிகு பாரதப்பிரதமரின் கனவுத்திட்டமான தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாளான 2019 அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை சுத்தமான நாடாக்கும் திட்டத்தின் கீழ் ரயில்வேத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக்கழகத்தின் (IRCTC) மூலமாக 75 ஏ1 தகுதி மற்றும் 332 ஏ தகுதி பெற்ற ரயில் நிலையங்களில் (மொத்தம் 407 ரயில்நிலையங்களில்) பயணிகளிடையே ரயில்நிலைய வளாக சுத்தம் பற்றி கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஆண்டுக்கு ரூ 50 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் ஏ1 தகுதியும், ஆண்டுக்கு ரூ 5 கோடி முதல் ரூ 50 கோடி வரை வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் ஏ தகுதியும் நிச்சயிக்கப்பட்டுள்ளன.  
  
அவ்வாறு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பயணிகள் 40 வேறுபட்ட சுத்தத்திற்கான மதிப்பெண் வழங்குமாறும், மிகச்சிறப்பாக இருந்தால் 5 மதிப்பெண்ணும், மிக மோசமாக இருந்தால் 1 மதிப்பெண்ணும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மொத்தம் உள்ள 407 ரயில் நிலையங்களும் சுத்தமாக இருப்பதன் அடிப்படையில் பட்டியலிடப்பட்டதில் 75 ஏ1 தகுதி ரயில்நிலையங்களிடையே இந்தியாவின் 13வது மிக சுத்தமான ரயில் நிலையமாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் கோயம்புத்தூர் ரயில்நிலையம் இடம் பெற்றுள்ளது.



ஏ தகுதி ரயில்நிலையங்களில் மிக சுத்தமான ரயில்நிலையங்களின் பட்டியலில் இந்தியாவில் மிக சுத்தமான 7வது ரயில்நிலையமாக சேலம் கோட்டத்தின் சேலம் ரயில்நிலையமும், ஈரோடு ரயில் நிலையம் 11வது இடமும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் 18வது இடமும் பிடித்துள்ளன.



சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது சேலம் கோட்டம் கடந்த ஆண்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களின் விளைவாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளின் மாணவர்கள் ஆகியோரின் ஈடுபாடும் இதற்கு ஒரு காரணம் என்றும் சொன்னார்.  ரயில்நிலையங்களில் மற்றும் ரயில் நிலையங்களின் முன்புறம் குப்பை கொட்டுவதற்கு பெரிய அளவிலான குப்பைக்கூடைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்பெட்டிகளுக்கிடையே உள்ள வெஸ்டிபியூல் பகுதிகளில் உணவு மீதங்களை கொட்டுவதை தவிர்க்க மாற்றக்கூடிய குப்பை பைகளை வைத்து அவற்றை சேலம் கோட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் திரு. சுப்ரான்சு அவர்கள் ரயில் பயணிகள் மற்றும் ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் சேலம் கோட்ட ரயில் நிலையங்களை சுத்தமாக பராமரிப்பதில்  பெரும் அளவில் ஒத்துழைப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து அவ்வாறு உதவினால் ரயில் நிலையங்கள் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க இயலும் என்றும் தெரிவித்தார். 

ஈரோட்டில் ரயில்வே மருத்துவமனை புதிய கட்டிடம் இன்று திறப்பு

 திரு,சுப்ரான்சு அவர்கள் புதிய ரயில்வே மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்
விழாவில் கலந்து கொண்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள திரு.சுப்ரான்சு அவர்களுடன்

மருத்துவமைனயின் அழகிய உட்புறத்தோற்றம் 
ஈரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை இன்று (29.03.2016) சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் எம் பிரசன்ன குமார், சேலம் கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ,கலாநிதி, மற்றும் சேலம் கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம். நரசிம்மம் மற்றும் இதர அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்ஈரோடு ரயில்நிலையம் பின்புறம் உள்ள ரயில்வே காலனியில் அமைந்துள்ள புதிய ரயில்வே மருத்துவமனை ரூ 5.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பல்நோக்கு மருத்துவமனையில், இன்டென்சிவ் கேர் மையம், பிரசவ மையம், அறுவை சிகிச்சை மையம், குழந்தைகள் பிரிவு, மற்றும் அதிநவீன லேபரோட்டரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதி நவீன மருத்துவ கருவிகள் சுமார் ரூ 45 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் தற்போது 60 படுக்கை வசதி உள்ளது. இது பின்னர் பெரிய அளவில் விரிவு படுத்தப்படும்

ஈரோட்டில் சேலம்  கோட்டத்தின் முக்கிய ரயில்வே அமைப்புகளான டீசல் எஞ்சின் பராமரிப்பு தொழிற்சாலை, மின் ரயில் எஞ்சின் பராமரிப்பு தொழிற்சாலை, ரயில்வே பள்ளிகள் போன்றவை இருப்பதாலும், சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் ஈரோட்டில் குடியிருப்பதாலும், இந்த ரயில்வே கோட்ட மருத்துவமனை ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ளதுமேலும், சேலம் கோட்டத்தின் பிற பகுதிகளான, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், கரூர் போன்ற இடங்களில் இருந்து சுமார் 10,250 ரயில்வே ஊழியர்கள் எளிதாக ரயில் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு ஈரோடு வந்து செல்ல முடியும்

திறப்பு விழாவில் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு ஈரோட்டில் ரயில்வே மருத்துவமனை சேலம் கோட்ட ரயில்வே ஊழியர்களுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், வருங்காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு பல்நோக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் பெரும் மருத்துவ மையமாக விரிவாக்கம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்

விழாவில், சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் மா.விக்னவேலு, முதுநிலை பொது மின் பொறியாளர் திரு. எஸ். ரெங்கராஜன், கோட்டப் பொறியாளர் திரு. நந்தகோபால் உள்ளிட்ட பல சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்

Wednesday 16 March 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஓய்வு பெறப் போகும் ரயில்வே ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

 திரு. சுப்ரான்சு அவர்கள் உரையாற்றுகிறார்
 திரு சுப்ரான்சு அவர்களை ஒரு மூத்த ஊழியர் வரவேற்கிறார்
 வந்திருந்தோரின் ஒரு பகுதி
 ஓய்வு பெறவுள்ள ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனை
ஓய்வு பெறவுள்ள ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்க்கப்படுகின்றன

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் 2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை ஓய்வு பெறவிருக்கும் ரயில்வே ஊழியர்களுக்காக ஈரோட்டில் உள்ள ரயில்வே கல்யாண மண்டபத்தில் இன்று (16.03.2016) ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.  இதில் 125 ஓய்வு பெறவிருக்கும் ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  தெற்கு ரயில்வேயில் பாலக்காடு கோட்டத்திற்கு பிறகு இத்தகு நிகழ்ச்சிகளை சேலம் கோட்டம் மட்டுமே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று உரையாற்றுகையில், ஓய்வு பெறவிருக்கும் ஊழியர்கள் தங்களது உடல்நலன் மற்றும் மனநலனைப் பேணுவது முக்கியம் என்றும், ரயில்வே சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர்கள் வாழ்வின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும் குறிப்பிட்டதுடன், இந்திய ரயில்வே இந்தியாவிலேயே அதிக அளவில் பணியாளர்கள் உள்ள நிறுவனமாக உள்ளதால், அது தனது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

சேலம் கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம். நரசிம்மம் அவர்களது தலைமையில் சேலம் கோட்ட மருத்துவப் பிரிவு, ஈரோடு வாசன் கண் மருத்துவ மனை மற்றும் கோயம்புத்தூர் எஸ்பிடி மருத்துவமனையுடன் இணைந்து ஓய்வு பெற உள்ள ஊழியர்களுக்கு, இரத்தம், கிட்னி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்பட்டு தக்க மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.  பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தபால் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஊழியர்கள் தங்களது ஓய்வுக்குப் பின் பெற உள்ள பணத்தை எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது  குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.  ஓய்வு பெற உள்ள ஊழியர்களுக்கு அவர்களது பணிப் பதிவேடு மற்றும் விடுமுறைப் பதிவேடுகளின் நகல்கள் வழங்கப்பட்டன.


சேலம் கோட்ட உதவி நிதி மேலாளர் திரு. ஆனந்த பாட்டியா, சேலம் கோட்ட மருத்துவப் பிரிவு, பணியாளர் பிரிவு, மற்றும் கணக்கியல் பிரிவுகளின் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  சேலம் கோட்ட உதவி பணியாளர் பிரிவு அலுவலர் திரு. என். வேலுமணி நன்றியுரை வழங்கினார். முன்னதாக, சேலம் கோட்ட பணியாளர் பிரிவு அலுவலர் திரு.ஜி ஜனார்த்தனன் வந்திருந்தோரை வரவேற்றார். 

Wednesday 9 March 2016

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கான அவசர மருத்துவ உதவி மையம்


கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையினால் நடத்தப்படும்  ரயில் பயணிகளுக்கான அவசர  மருத்துவ உதவி மையம் நாளின் 24 மணி நேரமும் செயல்படும். இந்த மருத்துவ உதவி மையத்தில் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் ரயில் பயணிகளுக்கு முதலுதவி வழங்கி அவர்களை அவர்கள் விரும்பும் எந்த ஒரு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் சாதாரண  நோய்களுக்கும் ரயில்பயணிகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும். இந்த மருத்துவ உதவி மையத்தில் ஈசிஜி கருவி, மற்றும் இருதயத்துடிப்பு செயற்கையாக அmளிக்கும் கருவி, அவசர கால மருந்துகள் போன்றவை இருப்பதால் ரயில் பயணிகளுக்கு உடனடி மருத்துவ வசதி வழங்க இயலும். இத்தகு மருத்துவ உதவி மையங்கள் சேலம் கோட்டத்தின் சேலம், ஈரோடு, மற்றும் கரூர் ரயில் நிலையங்களில்  முன்னரே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன

ரயில்களில் பார்சல்கள் புக்கிங் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை

ரயில்களில் பார்சல்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மோட்டார்வண்டிகளை புக்கிங் செய்யும் போது, அங்கீகரிக்கப்படாத இடைத்தரகர்கள் தலையிட்டு, பேக்கிங், ஏற்றுதல், இறக்குதல் என்ற பெயரில் ரயில்வே நிர்ணயித்துள்ள தொகையை விட அதிகமாக வசூலிப்பதாக  தெற்கு ரயில்வே வணிகவியல் பிரிவுக்கு புகார்கள் வந்துள்ளன.


இத்தகு இடைத்தரகர்களின் தலையீட்டை தவிர்க்க, தெற்கு ரயில்வே அத்தகு புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதுடன், அடிக்கடி பார்சல் அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளதுசேலம் கோட்டத்தில் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் இத்தகு  பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிட்டால், உடனடியாக அவர்கள் 0427-2330 297 என்ற எண்ணில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களது பெயர், மொபைல் எண், மற்றும் இதில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர் யாராவது இருந்தால் அவர்களது பெயர் மற்றும் இதர விபரங்களை தெரிவித்தால், உடனடியாக நடவடிகக்கை எடுக்கப்படும்