Wednesday 16 March 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஓய்வு பெறப் போகும் ரயில்வே ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

 திரு. சுப்ரான்சு அவர்கள் உரையாற்றுகிறார்
 திரு சுப்ரான்சு அவர்களை ஒரு மூத்த ஊழியர் வரவேற்கிறார்
 வந்திருந்தோரின் ஒரு பகுதி
 ஓய்வு பெறவுள்ள ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனை
ஓய்வு பெறவுள்ள ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்க்கப்படுகின்றன

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் 2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை ஓய்வு பெறவிருக்கும் ரயில்வே ஊழியர்களுக்காக ஈரோட்டில் உள்ள ரயில்வே கல்யாண மண்டபத்தில் இன்று (16.03.2016) ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.  இதில் 125 ஓய்வு பெறவிருக்கும் ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  தெற்கு ரயில்வேயில் பாலக்காடு கோட்டத்திற்கு பிறகு இத்தகு நிகழ்ச்சிகளை சேலம் கோட்டம் மட்டுமே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று உரையாற்றுகையில், ஓய்வு பெறவிருக்கும் ஊழியர்கள் தங்களது உடல்நலன் மற்றும் மனநலனைப் பேணுவது முக்கியம் என்றும், ரயில்வே சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர்கள் வாழ்வின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும் குறிப்பிட்டதுடன், இந்திய ரயில்வே இந்தியாவிலேயே அதிக அளவில் பணியாளர்கள் உள்ள நிறுவனமாக உள்ளதால், அது தனது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

சேலம் கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எம். நரசிம்மம் அவர்களது தலைமையில் சேலம் கோட்ட மருத்துவப் பிரிவு, ஈரோடு வாசன் கண் மருத்துவ மனை மற்றும் கோயம்புத்தூர் எஸ்பிடி மருத்துவமனையுடன் இணைந்து ஓய்வு பெற உள்ள ஊழியர்களுக்கு, இரத்தம், கிட்னி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்பட்டு தக்க மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.  பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தபால் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஊழியர்கள் தங்களது ஓய்வுக்குப் பின் பெற உள்ள பணத்தை எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது  குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.  ஓய்வு பெற உள்ள ஊழியர்களுக்கு அவர்களது பணிப் பதிவேடு மற்றும் விடுமுறைப் பதிவேடுகளின் நகல்கள் வழங்கப்பட்டன.


சேலம் கோட்ட உதவி நிதி மேலாளர் திரு. ஆனந்த பாட்டியா, சேலம் கோட்ட மருத்துவப் பிரிவு, பணியாளர் பிரிவு, மற்றும் கணக்கியல் பிரிவுகளின் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  சேலம் கோட்ட உதவி பணியாளர் பிரிவு அலுவலர் திரு. என். வேலுமணி நன்றியுரை வழங்கினார். முன்னதாக, சேலம் கோட்ட பணியாளர் பிரிவு அலுவலர் திரு.ஜி ஜனார்த்தனன் வந்திருந்தோரை வரவேற்றார். 

No comments:

Post a Comment