Tuesday 8 March 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள்

 திரு சுப்ரான்சு உரையாற்றுகிறார்
 விழாவிற்கு வந்திருந்தோர்
 திருமதி ஜோத்சனா பிரசாத் பரிசுகளை வழங்குகிறார்
 திரு. சுப்ரான்சு ஒரு பெண் ஊழியருக்கு சிறப்பாக பணியாற்றியமைக்கு சிறப்புப் பரிசு வழங்குகிறார்
பரிசுகளை வென்ற மகளிர் திருமதி ஜோத்சனா பிரசாத் அவர்களுடன்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 2016ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினம்  இன்று (08.03.2016) சிறப்பாக கொண்டாடப்பட்டது.  சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார்.  சேலம் தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவர் திருமதி ஜோத்சனா பிரசாத் அவர்கள் விழாவின் முக்கிய விருந்தினராக பங்கேற்றார்.  சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு ஆர். எஸ். சின்ஹா, சேலம் கோட்ட பணியாளர் நல அலுவலர் திரு ஜி ஜனார்த்தனன், சேலம் கட்டுமானப் பிரிவு செயல்பாட்டு பொறியாளரும் சேலம் கோட்ட மகளிர் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான  திருமதி ரதி ஆகியோருடன், சேலம் கோட்ட பெண் ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

திரு சுப்ரான்சு அவர்கள் விழாவில் பேசுகையில், சர்வதேச மகளிர் தினம் சமூகத்தின் மகளிரின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக கொண்டாடப்படுவதாகவும், ஆனால் இத்தினத்தை ஆடவர் மகளிருக்கு அதிகாரப் பகிர்வு நாளாக்குவதில் பொருளில்லை என்றும், ஏனெனில் மகளிர் ஆடவரிடம் அதிகாரப் பகிர்வுக்கு காத்திருப்பது போன்று ஒரு தோற்றமளிப்பதாகவும் தெரிவித்தார்..  இன்றைய சூழலில் இல்லத்தரசிகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், ரயில் எஞ்சின் ஓட்டுநர், விமான ஓட்டுநர், வியாபாரம் போன்ற பல துறைகளிலும் மகளிர் சிறந்து விளங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  சேலம் கோட்ட பெண் பணியாளர்கள், தாங்கள் சிறப்பாக மேம்பட்டு வருவது போல் தங்களைச் சுற்றி உள்ள பெண்களுக்கும் பொருளாதாரத்தில் சுதந்திரமாக விளங்க கற்றுத்தர வேண்டும் என்றும், பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு முழு சுதந்திரம் தர முடியும் என்றும் சொன்னார்.

திருமதி  ஜோத்சனா பிரசாத் தனது உரையில், நாடு முன்னேற வேண்டுமென்றால் அதற்கு மகளிருக்கு முக்கியத்துவம் தருவதன் மூலமாகவே அது முடியும் என்றும், மகளிரின் மேம்பாடே ஒரு நாட்டின் மேம்பாடாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.  பெண்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் ஆண் பெண் பேதமின்றி வளர்த்தால் மட்டுமே, அடித்தட்டு மக்களிடையே பெண் குழந்தைகளுக்கு எதிரான மனப்பாங்கு குறையும் என்றும், மகளிர் இன்றைய சூழலில் அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார். 


பின்னர் திரு சுப்ரான்சு அவர்கள் தங்களது துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 12 பெண் ஊழியர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினார்.  சேலம் கோட்ட மேலாளரின் முயற்சியால் இத்தகு பரிசுகள் முதல் முறையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  திருமதி ஜோத்சனா பிரசாத் அவர்கள் பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற 24 பெண் ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.  திருமதி ரதி நன்றியுரை தெரிவித்தார்.  முன்னதாக, திரு. ஜி ஜனார்த்தனன் வரவேற்புரை வழங்கினார்.  

No comments:

Post a Comment