Tuesday 29 March 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அகில இந்திய அளவில் சுத்தமாக பராமரிக்கப்படும் ரயில் நிலையங்களில் முதன்மை இடங்கள் பெற்று சாதனை

2015 மற்றும் 2016க்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்கள் அறிவித்திருந்த படி மாண்புமிகு பாரதப்பிரதமரின் கனவுத்திட்டமான தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாளான 2019 அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை சுத்தமான நாடாக்கும் திட்டத்தின் கீழ் ரயில்வேத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக்கழகத்தின் (IRCTC) மூலமாக 75 ஏ1 தகுதி மற்றும் 332 ஏ தகுதி பெற்ற ரயில் நிலையங்களில் (மொத்தம் 407 ரயில்நிலையங்களில்) பயணிகளிடையே ரயில்நிலைய வளாக சுத்தம் பற்றி கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஆண்டுக்கு ரூ 50 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் ஏ1 தகுதியும், ஆண்டுக்கு ரூ 5 கோடி முதல் ரூ 50 கோடி வரை வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் ஏ தகுதியும் நிச்சயிக்கப்பட்டுள்ளன.  
  
அவ்வாறு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பயணிகள் 40 வேறுபட்ட சுத்தத்திற்கான மதிப்பெண் வழங்குமாறும், மிகச்சிறப்பாக இருந்தால் 5 மதிப்பெண்ணும், மிக மோசமாக இருந்தால் 1 மதிப்பெண்ணும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மொத்தம் உள்ள 407 ரயில் நிலையங்களும் சுத்தமாக இருப்பதன் அடிப்படையில் பட்டியலிடப்பட்டதில் 75 ஏ1 தகுதி ரயில்நிலையங்களிடையே இந்தியாவின் 13வது மிக சுத்தமான ரயில் நிலையமாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் கோயம்புத்தூர் ரயில்நிலையம் இடம் பெற்றுள்ளது.



ஏ தகுதி ரயில்நிலையங்களில் மிக சுத்தமான ரயில்நிலையங்களின் பட்டியலில் இந்தியாவில் மிக சுத்தமான 7வது ரயில்நிலையமாக சேலம் கோட்டத்தின் சேலம் ரயில்நிலையமும், ஈரோடு ரயில் நிலையம் 11வது இடமும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் 18வது இடமும் பிடித்துள்ளன.



சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது சேலம் கோட்டம் கடந்த ஆண்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களின் விளைவாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளின் மாணவர்கள் ஆகியோரின் ஈடுபாடும் இதற்கு ஒரு காரணம் என்றும் சொன்னார்.  ரயில்நிலையங்களில் மற்றும் ரயில் நிலையங்களின் முன்புறம் குப்பை கொட்டுவதற்கு பெரிய அளவிலான குப்பைக்கூடைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்பெட்டிகளுக்கிடையே உள்ள வெஸ்டிபியூல் பகுதிகளில் உணவு மீதங்களை கொட்டுவதை தவிர்க்க மாற்றக்கூடிய குப்பை பைகளை வைத்து அவற்றை சேலம் கோட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் திரு. சுப்ரான்சு அவர்கள் ரயில் பயணிகள் மற்றும் ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் சேலம் கோட்ட ரயில் நிலையங்களை சுத்தமாக பராமரிப்பதில்  பெரும் அளவில் ஒத்துழைப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து அவ்வாறு உதவினால் ரயில் நிலையங்கள் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க இயலும் என்றும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment