Saturday 28 May 2016

சங்ககிரி ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு / தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்பு தொழிற்கூடங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ்

 பயணிகள் சேவை நாள் 
 சங்ககிரி ரயில் நிலையத்தில் சோதனை 
 திரு ஹரிசங்கர் வர்மா பயணிகளிடம் உரையாடுகிறார்
 ஈரோடு ரயில்பெட்டி பராமரிப்பு தொழிற்கூடத்திற்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ்
கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்பு தொழிற்கூடத்திற்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ்
 பத்திரிக்கையாளர் சந்திப்பு
 திரு ஹரிசங்கர் வர்மா உரையாற்றுகிறார்
திரு. ஆர். குப்பன் அவர்கள் உரையாற்றுகிறார்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்பு தொழிற்கூடங்களுக்கு ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் வழங்கும் விழா இன்று (28.05.2016) ஈரோட்டில் உள்ள பயிற்சிப்பள்ளியில் இன்று நடைபெற்றது. தெற்கு ரயில்வே தலைமை இயந்திரவியல் பொறியாளர் திரு. ஆர். குப்பன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு இதற்கான சான்றிதழ்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர்  வர்மா  அவர்களிடம் வழங்கினார். 

தெற்கு ரயில்வே தலைமை இயந்திரவியல் பொறியாளர் திரு. ஆர். குப்பன் அவர்கள் விழாவில் பேசுகையில், ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் பெறுவதன் முக்கிய நோக்கம் ரயில் பயணிகளிடையே திருப்தி ஏற்படுத்துவதாகவே இருக்க வேண்டும் என்றும், இத் தரச் சான்றிதழ் பெறுவதால், தொடர்ந்து ரயில் பெட்டிகள் பராமரிப்பில் சிறந்த கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சொன்னதுடன், இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு சுகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அனைத்து தொழிற்கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஒருங்கிணைந்த தர மேலாண்மைச் சான்றிதழ் பெற முயற்சிகள் எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சொன்னார்.  ஒருங்கிணைந்த தர மேலாண்மைச் சான்றிதழில் தரக்கட்டுப்பாட்டு மேலாண்மை ஐஎஸ்ஓ 9001, சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு மேலாண்மை ஐஎஸ்ஓ 14001. மற்றும் ஊழியர் பணியிட உடல்நலக்கட்டுப்பாட்டு மேலாண்மை ஐஎஸ்ஓ 18001. ஆகியவை உள்ளடங்கியிருப்பதால், ரயில்பயணிகளிடையே ரயில்வே பற்றிய ஒரு சிறந்த நல்லுணர்வை ஏற்படுத்தும் என்று சொன்னார்.  இந்த சான்றிதழை பெற முயற்சிகள் மேற்கொண்ட சேலம் கோட்ட முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் திரு. ஆர் சரவணன் மற்றும் அவரது குழுவினரை பாராட்டினார். 

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா அவர்கள் பேசுகையில், கடந்த ஆறு மாதங்களாக சேலம் கோட்ட இயந்திரவியல் பிரிவு இந்த சான்றிதழ் பெற முயற்சிகள் எடுத்து வந்ததாகவும், மேலும் ஐஎஸ்ஓ 14001. மற்றும் ஐஎஸ்ஓ 18001 சான்றிதழ்கள் பெற முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஈரோட்டில் உள்ள டீசல் ரயில் எஞ்சின் பராமரிப்பு பணிமனை தொடங்கி 50 ஆண்டுகள் ஆகி உள்ளதாகவும், பொன் விழா ஆண்டில் டீசல் ரயில் எஞ்சின் பராமரிப்பு பணிமனை ஒருங்கிணைந்த தர மேலாண்மைச் சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொன்ன அவர், ரயில்வேயின் உள்ளேயும் மற்றும் வெளியிலிருந்தும் தரக்கண்காணிப்பு நிபுணர்கள் வந்து சோதனைகள் மேற்கொண்ட பின்னரே, இத்தரச் சான்றிதழ் வழங்கப்படுவதால், கடுமையான முறையில் தரம் பரிசோதிக்கப்படும் என்றும் சொன்னார். 

பின்னர் செய்தியாளர்களிடையே உரையாடுகையில், திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்றும், கோயம்புத்தூர் ரயில்நிலையத்திற்கு ஒருங்கிணைந்த தர மேலாண்மைச் சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொன்னார், மேலும், சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், கடைகளில் குத்தகைதாரர் பெயர், தொடர்பு எண், மற்றும் அந்த ரயில்நிலையத்தின் பொறுப்பில் உள்ள அதிகாரியின் பெயர், தொடர்பு எண் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், பயணிகள் இந்த எண்களை தொடர்பு கொண்டு உடனடியாக தங்களது புகார்களுக்கு தீர்வு பெறமுடியும் என்றும் சொன்னார்.  மேலும், ரயில்நிலையங்களில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தட்டுகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத பாக்குமட்டை தட்டுக்களை உபயோகிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்திய ரயில்வே எங்கும் இத்தகு தட்டுகள் உபயோகப்படுத்த இது முன்மாதிரியாக அமைய வாய்ப்புள்ளது என்றும் சொன்னார்.  நெடுந்தொலைவு ரயில்களில் பயணிகள் தண்ணீர் இன்றி துயருறுவது பற்றி சொன்ன போது, காவேரி நதியில் நீர் வற்றியுள்ளதால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இதை சரி செய்ய ரயில்களுக்கு சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நீர் நிரப்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக ஈரோடு ரயில்நிலையத்தில் மின்தூக்கி மற்றும் மின்நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் சொன்னார்.  

பின்னர், நாடெங்கிலும் இந்திய ரயில்வேயால் அனுசரிக்கப்பட்டுவரும் ரயில்பயணிகள் வசதி மேம்பாட்டு வாரத்தின் மூன்றாவது நாள் சேவை தினமான இன்று, சங்ககிரி ரயில்நிலையத்தில் எர்ணாகுளம் பெங்களூரு நகரிடை விரைவு ரயிலில் பயணிகளிடம் குறைகேட்டறிந்தார்.  ரயிலின் மாற்றுத்திரனாளிகள் பெட்டியில் இதர பயணிகள் இருப்பதாக குறை தெரிவிக்கப்பட்டபோது, அவரது ஆணையின் பேரில் அத்தகு பயணிகள் இறக்கி விடப்பட்டு பொதுப்பெட்டிக்கு மாற்றப்பட்டார்கள்.  ரயில்நிலையத்தில் சில பயணிகள் குடிநீர் வசதி மற்றும் இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை  இல்லாமல் இருப்பது பற்றி சுட்டிக்காட்டிய போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் விரைவிலேயே நிறுவப்பட உள்ளதாக தெரிவித்த அவர், பகுதிப் பொறியாளரிடம் இரண்டாம் நடைமேடையில் கூரை மற்றும் இருக்கைகள் அமைக்க தேவையான மதிப்பீட்டினை சமர்ப்பிக்குமாறு ஆணை பிறப்பித்தார்.  

No comments:

Post a Comment