Wednesday 1 June 2016

பயணிகள் சேவை வாரவிழாவின் ஏழாவது நாளான இன்று மக்கள் தொடர்பு தினம் அனுசரிப்பு சேலம் ரயில்நிலையத்தில் குளிர்வசதி தங்கும் அறையை சேலம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது புட்டிரெட்டிபட்டி ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் திறப்பு


மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பின்ர் அவர்கள் தங்கும் அறையை திறந்து வைக்கிறார்
கோட்ட மேலாளர் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடுகிறார்
இடமிருந்து வலம் மாண்புமிகு சேலம் மேயர் மாண்புமிகு சேலம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர்
ரயில்வே  கோட்ட மேலாளர் திரு பன்னீர் செல்வம்  அவர்களை வரவேற்கிறார்
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கோட்டமேலாளருடன் கலந்தாலோசிக்கிறார்
நகரும் மின்படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிடுகிறார்

மாண்புமிகு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கோட்டமேலாளரை சந்திக்கிறார்

புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் நடைமேம்பாலத்தை மூத்த நிலைய ஊழியர் திரு ராஜு திறந்து வைக்கிறார்
புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நடைமேம்பாலம்

இந்திய ரயில்வேயில் பயணிகள் சேவை வாரவிழாவின் ஏழாவது நாளான இன்று மக்கள் தொடர்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இன்று சேலம் ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்ட குளிர்வசதி பயணிகள் தங்கும் அறையை மாண்புமிகு சேலம் பாராளுமன்ற உறுப்பினர் திரு பன்னீர் செல்வம் அவர்கள் சேலம் மாநகர மேயர் திரு சவுண்டப்பன் அவர்கள், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.


இந்த குளிர்வசதி கொண்ட பயணிகள் தங்கும் அறையில் 36 பேர் அமர இடவசதி உள்ளது. மதுரையை சேர்ந்த ஏஜேபி நிறுவனத்தினருக்கு 3 ஆண்டுகளுக்கு 10.5 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 15 ரூபாய் தங்கும் கட்டணமாக வசூலிக்கப்படும். இங்கு கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 100 முதல் 150  பேர் தங்குவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தங்கும் அறையை திறந்து வைத்த பின்னர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் 3/4 பிளாட்பாரங்களில் உள்ள நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படுவதை மேற்பார்வையிட்டார். அவர் கோட்ட  மேலாளருடன் சேலத்தில் உள்ள பல்வேறு ரயில்வே பற்றிய விஷயங்களை விவாதித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம்  பேசிய திரு ஹரிசங்கர் வர்மா சேலம் நகர் மையநகரமாக உள்ளதால், சேலம் ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கிச் செல்ல உதவியாக இருக்கும் என்றும், குத்தகைதாரர் பயணிகளுக்கு தேவைப்படும் போது, காபி,தேனீர் மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்கித் தருவார் என்றும் தெரிவித்தார்.  சேலம் கோட்ட ரயில் நிலையங்களில்  சுத்தம் கடுமையாக கண்காணிக்கப் படுவதாகவும், உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவது சோதனை செய்யப்படுவதாகவும் சொன்னார்.  மேலும் அதிகமான பயணிகள் தங்கும் விதமாக, குளிர் வசதி செய்யப்பட்ட தங்கும் அறை மேலும் விரிவாக்கப்பட  உள்ளதாகவும்  தெரிவித்தார். 

தற்போதுள்ள சேலம் ரயில்நிலைய நுழைவுவாயில் வாகனப் போக்குவரத்து காரணமாக பயணிகள் வந்து செல்ல வசதியாக பின்புறம் ஒரு நுழைவுவாயில் உருவாக்கப்பட உள்ளதாகவும், இன்னும்12 முதல் 18 மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும் என்றும்  திரு  வர்மா சொன்னார்.  சேலம் சென்னை இடையே விரைவு ரயில் ஒன்று காலை சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்று மாலையில் சேலம் திரும்பும்  படி இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், இது  குறித்து மாண்புமிகு சேலம் பாராளுமன்ற  உறுப்பினர் அவர்கள் மாண்புமிகு ரயில்வே அமைச்சரை  சந்தித்த போது ரயில்பெட்டிகள் பற்றாக்குறை பற்றி விளக்கியதாகவும் சொன்ன அவர், இது குறித்து தலைமை அலுவலகத்துடன் தொடர்ந்து கடிதப்போக்குவரத்து மேற்கொள்ளப்படும்  என்றும் அவர்  சொன்னார். 

நீலகிரி மலை ரயில் பகுதியில் கூடுதல் ரயில்கள் இயக்குவதுபற்றி  கேட்டபோது, மலைப்பகுதி மிகவும் செங்குத்தாக இருப்பதால், கூடுதல் ரயில்கள் இயக்க தற்போதுள்ள ரயில் எஞ்சின்களைக் கொண்ட  இயலாது,  சேலத்தில் இருந்து மற்றும் சேலத்திற்கு ஜோலார்பேட்டை, கோயம்புத்தூர் மற்றும்  ஈரோடு போன்ற இடங்களுக்கு பயணிகள் ரயில்களை நீட்டிப்பது பற்றி கேட்ட போது, தற்போது சேலத்தில் ரயில்பெட்டிகள் பராமரிப்பு பணிமனை இல்லை என்றும், அதற்கு பெரிய  அளவில்  இடம்தேவைப்படும் காரணத்தால், தற்போதைக்கு அதற்கு சாத்தியம் இல்லை என்றும், மேற்கொண்டு பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

சேலம் கோட்டத்தில் வைபை இணையதள இணைப்பு அமைப்பது குறித்து கேட்கப்பட்ட  போது, கோயம்புத்தூரில் விரைவில் ரயில்டெல் மற்றும்  கூகுள் நிறுவனங்களின் ஒத்துணைப்புடன் இலவச இணையதள சேவை வழங்கப்படும் என்றும், சேலத்தில் தற்போது அத்தகைய திட்டம்  ஏதும் இல்லாததால், குளிர்வசதி செய்யப்பட்டுள்ள தங்கும்  அறையில் கட்டண  அடிப்படையிலான இணையதள வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சேலம் கோட்டத்தில் உள்ள புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் பயணிகள் தண்டவாளங்களை எளிதாக கடந்து செல்ல வசதியாக புதியதாக  அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை புட்டிரெட்டிபட்டி ரயில்நிலைய மூத்த ஊழியரான ராஜு அவர்கள், சேலம்  கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு. மா. விக்னவேலு  மற்றும்சேலம்கோட்ட பொறியாளர் திரு. மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நடைமேம்பாலம் 1.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இன்று மாண்புமிகு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு எஸ்.செல்வகுமார சின்னையன் அவர்கள் சேலம்கோட்ட  மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மாவை சேலத்தில் சந்தித்து ஈரோட்டில் மேற்கொள்ளப்பட வேணடிய பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தார்.  அவர் முன்வைத்த கோரிக்கைகளான விரைவு ரயில்களை கொடுமுடி ரயில்நிலையத்தில் நிறுத்துவது, ஈரோடு பழனி அகல ரயில்பாதை திட்டத்தை மேற்கொள்வது, ஈரோடு ரயில்நிலையத்தில் மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்துவது, ஈரோடு ரயில்நிலையத்தில் மின்தூக்கி மற்றும் நகரும் மின்படிக்கட்டுகள் அமைப்பது போன்ற மேம்பாடுகளுக்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், ஜூன் மாத நடுவில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடன் ஒருங்கிணைந்து ஈரோடு ரயில் நிலையத்தை மேற்பார்வையிட  வருவதாகவும் உறுதியளித்தார்.  

No comments:

Post a Comment