Friday 10 June 2016

2018 இறுதிக்குள் சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகள் முற்றிலுமாக நீக்கப்படும், 2016-17ம் ஆண்டில் சேலம் கோட்டத்தில் லெவல் கிராசங்குகளில் விபத்துகள் முற்றிலும் தவிர்ப்பு – சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி

கோட்ட மேலாளரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
 சர்வதேச லெவல்கிராசிங் விழிப்புணர்வு தினம்
ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்


இன்று சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாளையொட்டி, சேலம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, 2018 இறுதிக்குள் சேலம் கோட்டத்தில் உள்ள 72 ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகள் ஆளியக்கம், தரைக்கீழ்ப்பாலம், தரைமேம்பாலம் கட்டுவதன் மூலமாக முற்றிலுமாக நீக்கப்படும், என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தெரிவித்தார். அவற்றுள், 53 லெவல் கிராசிங்குகள் இந்த ஆண்டிலும் 19 அடுத்த ஆண்டிலும் மூடப்படும் என்றும் தெரிவித்த அவர், இந்த ஆண்டில் இதற்காக 6 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான அளவு நிதி கிடைத்தால், அடுத்த ஆண்டுக்கான வேலைகள் இந்த ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 

15  லெவல் கிராசிங்குகளில் அதற்கான கட்டுமானப் பொருட்கள் தயாராக இருப்பதாகவும், சேலம் விருத்தாசலம் மற்றும் சேலம் திண்டுக்கல் தடங்களில் 2 லெவல் கிராசிங்குகளை மூட சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் சொன்ன அவர், 2015-16ம் ஆண்டில் சேலம கோட்ட பாதுகாப்புப் பிரிவு மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் லெவல் கிராசிங் விபத்துகள் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், நீலகிரி மலைரயில் பாதையில் யானைகள் நடமாட்டத்தினார் விபத்து ஏதும் நடைபெறாமல் இருக்க வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சேலம் ரயில்நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையை அகலப்படுத்த சேலம் மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது சேலம் ரயில்நிலையம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில்களை சேலம் டவுன் ரயில்நிலையம் வரை நீட்டிப்பது பற்றிய கேள்விக்கு, சேலம் டவுன் ரயில்நிலையத்தில் தற்போது வசதிகள் குறைவாக இருப்பதால் அது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் என்று பதிலளித்தார்.  சேலம் சென்னை இடையே பகல் நேர விரைவு ரயில், கோயம்புத்தூர் பங்களூரு இடையே இரவு நேர விரைவு ரயில் புதியதாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சொன்னார். 

ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலில் எச்சரிக்கை, பின்னர் அபராதம் போன்றவை விதிக்கப்பட்டு அதன்பிறகும் பிரச்சினை தொடர்ந்தால் அந்த வணிகரின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அங்கீகாரமற்ற விற்பனையாளர்களின் நடமாட்டத்தை தவிர்க்க உரிமதார்ர்களுக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாளர்களை நியமிக்க அனுமதி தரப்பட உள்ளதாகவும் சொன்னார்.  ரயில்நிலையங்களில் வழங்கப்படும் உணவின் தரம் கடுமையாக கண்காணிக்கப்படுவதாகவும், கலப்படம் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால், அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்றவற்றுடன் கலப்படத் தண்டனைச்சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவ்வாறு தவறு செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு. வர்மா சொன்னார். 

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு ரவி சேகர் சின்ஹா, கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் மா. விக்னவேலு, மற்றும் கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி திரு ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.  

No comments:

Post a Comment