Sunday 5 June 2016

உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இன்று (05.06.2016), தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம், மரக்கன்றுகள் நடுதல், ரயில்வே ஊழியர்களிடம் கலந்தாலோசனை

 உலக சுற்றுச்சூழல் தினம்
 திரு ஹரிசங்கர் வர்மா  அவர்கள் அதிகாரிகளுடன் உரையாடுகிறார்
 குடியிருப்பில் மரம் நடப்படுவதை திரு வர்மா பாராட்டுகிறார்
 குடியிருப்புவாசிகள் மரம் நடும் காட்சி
 ஒரு ஊழியர் மரம் நட திரு வர்மா உதவும் காட்சி
திரு வர்மா அவர்கள் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை குடியிருப்பு வாசிகளிடம் வழங்குகிறார்

உலக சுற்றுப்புற நாளை முன்னிட்டு, இன்று (05.06.2016) தெற்கு ரயில்வே  சேலம் கோட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம்  ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் சேலத்தில் உள்ள ரயில்வே குடியிருப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. புவி வெப்பமாவதன் விளைவுகள் பற்றியும், மின்சாரம் சேமிக்க பழைய மின்சார பல்புகளுக்கு பதிலாக குறுங்குழல் மற்றும் எல்ஈடி விளக்குகள் பயன்படுத்துவதன் அவசியம் பற்றியும், பெருமளவில் மரங்களை நட்டு அவற்றை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பொது  இடங்களில் மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் குப்பை போடாமலிருப்பதன் அவசியம் குறித்தும், ரயில்வே குடியிருப்புகளை தூய்மையாக பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

திரு வர்மா அவர்கள் ரயில்வே குடியிருப்பு வாசிகளிடம் கலந்துரையாடிய போது, காலனி அருகில் இறந்தவர்களை எரிக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும், அங்கிருந்து வெளிப்படும் புகை மற்றும் நாற்றம் தங்களது உடல்நலனுக்கு கேடு விளைவிப்பதாக இருப்பதாகவும் அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. திரு வர்மா  அவர்கள் புகையினால் ஏற்படும் கெடுதல்களை தவிர்க்க உடனடியாக காலனியின் சுற்றுச்சுவர்களின் உயரத்தை அதிகரித்து, அங்கு உயரமாக வளரும் மூங்கில் போன்ற மரங்களை வளர்க்குமாறு ஆணை பிறப்பித்தார். மேலும், சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அங்குள்ள சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுகோள் கடிதம் அனுப்பப்படும் என்றும் உறுதி அளித்தார்.  பிரச்சாரத்தில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு. ரவி சேகர் சின்ஹா, கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு மா. விக்னவேலு, கோட்ட  ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜுவின், கோட்ட முதுநிலை நிதி மேலாளர் திரு பி, கம்பன், கோட்ட  முதுநிலை இயக்க மேலாளர் திரு ஈ ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் கிழக்கு ரயில்வே காலனியில் இன்று சுமார் 70 மரக்கன்றுகள் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் முன்னிலையில் இதர அதிகாரிகள் மற்றும் குடியிருப்புவாசிகளால் நடப்பட்டன. திரு வர்மா  அவர்கள் ரயில்வே குடியிருப்பு வாசிகளை ஒவ்வொரு வீட்டிலும் சில மரங்கள் மற்றும் செடிகளை நட்டு பராமரிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

பின்னர், செய்தியாளர்களுடன் உரையாடுகையில், திரு வர்மா அவர்கள் இந்திய ரயிலவே சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும், ரயில்நிலையங்கள் உள்ளிட்ட ரயில்வே இடங்களை  சுத்தமாக பராமரிக்கவும், ரயில்வே வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மக்க்க்கூடிய சுற்றுச்சூழலை பாதிக்காத தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், சேலம் கோட்ட  ஊழியர்கள் இக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருப்பதாகவும்  தெரிவித்தார்,. 

No comments:

Post a Comment