Saturday 5 December 2015

சேலம் கோட்ட ஊழியர்கள் பயன்பாட்டுக்காக ஊழியர் மனமகிழ்மன்ற புதிய கட்டிடம் இன்று திறப்பு




சேலம் ரயில்வே கோட்ட ஊழியர்களின் பயன்பாட்டிற்காக சேலம் ரயில்நிலையம் பின்புறம் உள்ள மேற்கு ரயில்வே குடியிருப்பில் புதிய மனமகிழ் மன்ற கட்டிடத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு இன்று (05.12.2015) திறந்து வைத்தார்.  சுமார் 500 பேர் உட்கார வசதி கொண்ட இந்தக் கட்டிடம் ஆலோசனைக்கூட்டம் போன்ற அலுவலக நிகழ்வுகளையும், ரயில்வே ஊழியர்களது இல்லத் திருமணம் போன்ற சொந்த விழாக்களையும் நடத்திக்கொள்ளலாம்.  பொதுமக்களுக்கும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். ஆனால், அதற்கான கட்டணம் பின்னர் நிர்ணயிக்கப்படும். ரயில்வே ஊழியர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு, கட்டணம் குறைந்த பட்சமாக நிர்ணயிக்கப்படும் 96.26 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தில், எதிர்காலத்தில், ஒரு சமையற்கூடம், உணவருந்தும் கூடம், கட்டிடத்தை சுற்றி தோட்டம் போன்றவை கட்டப்படும்.  


பின்னர், பத்திரிக்கையாளர்களுடன் உரையாடுகையில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சுப்ரான்சு மத்திய ரயில்வே வாரியம் சேலத்தில் இருந்து சென்னைக்கு விருத்தாசலம் மார்க்கத்தில் தினசரி காலை நேர ரயில் இயக்க ஒப்புதல் தந்துள்ளதாகவும் இந்த ரயிலை இயக்க விரையில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ சென்னை நோக்கியும் சென்னையில் இருந்தும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருவதாகவும், நாளை மதியத்திற்குள் மழைநீர் தேக்க அளவு குறைந்தால் வழக்கமான ரயில்களை படிப்படியாக இயக்க முடியும் என்றும் தெரிவித்தார்.  சேலம் கோட்டத்திலிருந்து வெள்ள நிவாரணப்பணிகளுக்கு 32 ரயில்வேகன்களில் கட்டுமானப்பொருட்களும், அதனுடன் 90 சேலம் கோட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த திரு. சுப்ரான்சு, சேலம் கோட்டத்தில் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக நிவாரணப் பொருட்கள் அனுப்ப சேலம் கோட்டத்தை அணுகியுள்ளதாகவும், பயணிகள் ரயில்சேவை ஓரளவு சீர்செய்யப்பட்டவுடன் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சொன்னார். 

No comments:

Post a Comment