Monday 25 January 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 67வது குடியரசு தின விழா

 சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சுப்ரான்சு மூவர்ணக் கொடியேற்றுகிறார்
 திரு, சுப்ரான்சு கொடியேற்றி வணக்கம் தெரிவிக்கிறார்
 திரு சுப்ரான்சு ரயில்வே  பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்
 திரு. சுப்ரான்சு அவர்கள் உரையாற்றுகிறார் வலது புறம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு  ஆணையர் திரு. ராஜ்மோஹன், இடது புறம் கோட்ட ரயில்வே உதவி பாதுகாப்பு ஆணையர் திரு கோவிந்தராஜன்
 திரு சுப்ரான்சு ஈரோடு ரயில்வே பள்ளியின் வாத்தியக்குழு தலைமை ஏற்ற ஈரோடு ரயில்வே உயர்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவன் செல்வன் குகன் உடன் கை குலுக்கும் காட்சி
 ரயில்வே பாதுகாப்புப் படையின் நாய்கள் குழுவின் ஒரு நாய் தனது பயிற்சியாளரைப் போன்றே வணங்கி நிற்கும் காட்சி
  ரயில்வே பாதுகாப்புப் படையின் நாய்கள் குழுவின் நாய்கள் தனது பயிற்சியாளரை தவிர மற்றவரிடம் உணவு ஏற்க மறுக்கும் காட்சி
 திரு செந்தில் குமார், சரக்கு ரயில் கார்டு சிறந்த பாதுகாப்பு சேவைக்காக சேலம் கோட்ட மேலாளரிடம் சான்றிதழ் பெறுகிறார்
 திரு செல்வகுமார், உதவி வணிகமேலாளர் சிறந்த பயணிகள் சேவைக்காக சேலம் கோட்ட மேலாளரிடம் சான்றிதழ் பெறுகிறார்
சேலம் கோட்ட ஊழியர்களின் குழந்தைகள் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சி

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் நடைபெற்ற 67வது குடியரசு தின விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு, சுப்ரான்சு அவர்கள் கொடியேற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் சேலம் கோட்ட  அதிகாரிகளும், ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினருடன் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

முதன் முறையாக ரயில் இயக்க பாதுகாப்பு மற்றும் பயணிகள் சேவையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக 5 சேலம் கோட்ட ஊழியர்களுக்கு பாராட்டுப் பத்திரங்களையும், ரொக்கப்பரிசையும் திரு. சுப்ரான்சு வழங்கினார்.

விழாவில் பேசுகையில், திரு, சுப்ரான்சு ஒவ்வொரு குடிமகனின் நலனைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இந்நாளில் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூர்ந்ததுடன், இந்திய ரயில்வேயும் அதே நோக்கத்துடன் பல லட்சக் கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கி வருவதாகவும் சொன்னார். 

சேலம் கோட்டத்தின் செயல்பாடுகள்
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 355 கோடி ரூபாய் பயணிகள் வருவாய் ஈட்டி சென்ற ஆண்டின் 340 கோடியை விட 4 சதவீதம் அதிகமாகி இருப்பதாகவும், இதர வருவாய் 7 சதவீதம் வளர்ந்திருப்பதாகவும், சரக்கு போக்குவரத்து குறைந்திருந்த போதிலும், 7 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் காரணமாக செலவுகள் 761 கோடியில் இருந்து 670  கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், 2015 ஏப்ரல் முதல் நவம்பர் வரை ரயில்களின் காலந்தவறாமை 86 சதவீதமாக இருந்து டிசம்பரில் 90 சதவீதமாக அதிகரித்திருப்பததாகவும், இது மேலும் உயர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொன்னார். 

புதிய ரயில்கள்
கடந்த ஆண்டில் சேலம் விருத்தாசலம் மார்க்கத்தில் அதி நவீன டீசல் மின்தொடர் ரயில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சேலம் நாமக்கல் கரூர் மார்க்கத்தில் பயணிகள் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்ன திரு. சுப்ரான்சு, இந்தஆண்டில், சேலம் சென்னை எழும்பூர் பகல் நேர விரைவு ரயில். விருத்தாசலம் சேலம் வழியாக திருச்சி பங்களூரு இடையே இரவு நேர விரைவு ரயில், கரூர் வழியாக சேலம் தஞ்சாவூர், மற்றும் சேலம் மதுரை இடையே பயணிகள் ரயில்கள், திருச்சி கரூர் பயணிகள் ரயிலை சேலம் வரை நீட்டிப்பு ஆகியவற்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

பயணிகள் வசதி மற்றும் குறை தீர்ப்பு
2015 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சேலம் கோட்டம் கீழ்க்கண்ட சாதனைகள் செய்திருப்பதாக திரு. சுப்ரான்சு சொன்னார்
§  மேட்டுப்பாளையம் வடகோயம்புத்தூர் தடம் மின்மயமாக்கல்
§  சேலம் ரயில் நிலையத்தில் 3-4 நடை மேடைகளில் புதிய பயணிகள் காத்திருப்பு அறைகள்
§  வடகோயம்புத்தூரில் புதிய ரயில்நிலைய கட்டிடம்
§  திருப்பூரில் 2வது நுழைவு வாயில் மற்றும் 2வது நடைமேடையில் புதிய பயணிகள் காத்திருப்பு அறை
§  கோயம்புத்தூரில் கத்திரி ரயில் தட இணைப்பை நீக்கி பாதுகாப்பான ரயில் இயக்கம்
§  பொம்மிடியில் 2-3 நடைமேடைகள் நீளம் அதிகரிப்பு
§  சங்ககிரியில் புதிய நடை மேம்பாலம்
§  கரூரில் புதிய பயணிகள் தங்கும் அறைகள்
§  கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 1 மற்றும் 4ல் ரயில்பெட்டி நிலைகாட்டும் நவீன மின்னணு பலகைகள்
§  மேட்டுப்பாளையத்தில் ரயில் அருங்காட்சியகம்
§  ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகே தனியார் மூலம் அதிக நேரம் செயல்படும் பயணிகள் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம்
§  வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளம் மூலமாக சுமார் 500 பயணிகள் குறை தீர்ப்பு

 பசுமை நடவடிக்கைகள்
திருப்பூரில் 2.88 கிலோவாட் சக்தி கொண்ட சூரிய மின்சக்தி தயாரிக்கும் அமைப்பு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் ரயில் நிலைய பயணிகள் தங்கும் அறைகளில் சூரிய மின்சக்தியால் வெந்நீர் தரும் அமைப்பு போன்றவை நிறுவப்பட்டுள்ளதாகவும், மேலும் சேலம்  கோட்ட  அலுவலகத்தில் விரைவில் 1 கிலோவாட் சக்தி கொண்ட சூரிய மின்சக்தி தயாரிக்கும் அமைப்பு நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தூய்மை நடவடிக்கைகள்
மாண்புமிகு பாரதப்பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், 2015ம் ஆண்டிலும் சேலம் கோட்டம் தனது அலுவலர்கள், ஊழியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆகியோரின் துணையுடன், சேலம் கோட்டம் முழுவதிலும் பொதுமக்களுக்கு ரயில்வே இடங்களை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தி வருவதாகவும், பல ரயில்நிலையங்களில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மூலம்  சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருவதாகவும், சேலம் கோட்டம் எங்கும் பெருமளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு  வருவதாகவும் திரு சுப்ரான்சு தெரிவித்தார்.

ஊழியர் நல நடவடிக்கைகள்
சேலம் கோட்டம் தனது ஊழியர்களின் மேம்பாட்டுக்காக எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில் 1118 புதிய ஊழியர்கள் ரயில்வே பணித்தேர்வு வாரியம், ரயில்வே பணித்தேர்வுச் சிற்றமைப்பு, கருணை அடிப்படையில் பணி நியமனம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வின் பேரில் அவர்களது மகன் மகள்களுக்கு பணி போன்ற முறைகளில் சேலம் கோட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 627ஐ விட 1345 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிவித்தார். 85 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற 144 ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 4.35 லட்ச ரூபாய் படிப்பூதியமாக வழங்கப்பட்டிருப்பதாகவும், கடும் நோயினால் பாதிக்கப்ட்டிருந்த 16 ஊழியர்களுக்கு கோட்டபணியாளர் நல நிதியில் இருந்து 2.85 லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் இந்த ஆண்டில் கடந்த ஆண்டில் தீர்க்கப்பட்ட 443 குறைகளை விட 493 ஊழியர்கள் குறைகள் தீர்க்கப்பட்டிருப்பதாக சொன்னார்சேலத்தில் புதிய ஊழியர் பொழுதுபோக்கு மையம் கட்டப்பட்டிருப்பதாகவும் மற்றும் கரூரில் திருமண மண்டபம் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்ன அவர் ஈரோட்டில் ரயில்வே மருத்துவமனை புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என்றும் சொன்னார். ஆத்தூர் மற்றும் கரூரில் 50 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு குடியேற தயாராக  உள்ளதாகவும், ஊட்டி மற்றும் குன்னூரில் விடுமுறை விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.  ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ். மற்றும் சேமநலநிதி (பிஎப்) போன்ற செய்திகள் உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் ஈரோட்டில் ஆதார் முகாம் மூலம் 700 ஊழியர்கள் பயன்பெற்றுள்ளதாகவும், அது போன்ற ஒரு முகாம் விரைவில் சேலம் கோட்ட அலுவலகத்தில் ஊழியர்களுக்காக நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு
ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்ய ரயில்வே பாதுகாப்புப் படையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டிய அவர், சேலம் கோட்ட பாதுகாப்பு பிரிவு லெவல் கிராசிங்குகளை பாதுகாப்பாக பொதுமக்கள் கடப்பது மற்றும் பாதுகாப்பாக ரயில்களை இயக்குவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருவதாகவும், தெரிவித்தார்ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் தானியங்கி எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டு ரயில்கள் இயக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்குகளும், தரைக்கீழ்ப்பாலம், தரைமேம்பாலம் மற்றும் குறைந்த பட்ச உபயோக சிறிய தரைக்கீப்பாலம் ஆகியவை கட்டுவதன் மூலமாக முற்றிலுமாக நீக்கப்பட்டு விடும் என்றும் திரு. சுப்ரான்சு  தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் ரயில்வே கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகள், ரயில்வே பள்ளிகளின் மாணவி மாணவிகள் மற்றும் சேலம் கோட்ட ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

No comments:

Post a Comment